கவிதைத் தொகுப்பு-எதிர்வினைகள் 3

அன்புள்ள கல்பனா மேடம்,


நலம். நலம் விழைகிறேன். கவிதைகளனைத்தையும் உங்கள் தளத்தில் வாசித்தேன். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.


கவிதை இரசனைக்கான என் பயிற்சி மிகக்குறைவே. தொகுப்பாக உங்கள் கவிதைகளை வாசிக்கையில் அவை தரும் அந்தரங்கமான அனுபவம் அபாரம். நம்முள் தனித்ததொரு உலகை சமைத்துவிடுகின்றன கவியின் சொற்கள். அங்கே கல்லும் நம்மோடு பேசுகிறது. கடலும் நம்மோடு விளையாடுகிறது. யானை சித்திரம் விட்டெழுகிறது. உணர்வுகள் சிறகடித்தெழுகின்றன சொற்களின் மீதேறி. 


எனக்கு மிகவும் பிடித்த கவிதை, சித்திரம் விட்டெழும் ஆனை. அதே போல உதிரும் இலையின் கவிதை (20), கொலைக்களத்தில் தினமும் மலரும் தாமரை, முகமூடி விற்பவனின் சித்திரம் (33), நம் இருவரின் தோல்வி எனக் கண்ணீர் (39), ஒரு நொடியில் நாளை இன்றாகிவிடுவது (41) கன்னியாகுமரி (44) யாவர்க்குமாய் அரை ஆழாக்கு சோறு பொங்கும் பெண் (65), நானாகி இங்கிருக்கும் குழந்தை (79) இப்படி நிறைய பிடித்தமான கவிதைகள். 


விரிவாக வேறு ஒரு நாள் எழுதுகிறேன். நன்றியும், வாழ்த்துக்களும்.


அன்புடன்,

வள்ளியப்பன்.

**********

அன்புள்ள கவிஞர் கல்பனா அவர்களுக்கு,


என் பெயர் ஜமீலா.


உங்கள் கவிதை பற்றி ஜெமோ தளத்தில் படிக்க நேர்ந்தது.
உங்கள் கவிதைகளைப் படித்தேன். அருமையாக இருந்தது. உண்மையில் நான் கவிதைக்கு ரசிகை அல்ல.
ஆனால் ஜெமோ அவர்கள் தளத்தில் வெளியாகும் கவிதைகளை வாசிப்பதுண்டு. தேவதேவன், ஞானக்கூத்தன்
இசை, அபி அவர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.


ஆனால் உங்கள் கவிதைகளை என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்கிறேன்.
அற்புதமான வரிகள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேன்மேலும் கவிதை உலகில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்.


உங்கள் அன்பு
ஜமீலா

*********

வணக்கம்

நான் சௌந்தர்.இன்று உங்கள் கவிதைகள் படித்தேன். மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பெரும்பாலான வரிகள் ஜீவாத்மா/பரமாத்மா பாவனையில் அமைந்தவை. சில கவிதைகள் ஆத்மாவின் ஓங்கிய குரலிலும். சில தனியனின் தவிப்பிலும் என, நெய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆம்…. அது, நாயகி/நாயக பாவத்திற்கு ஒரு படி மேலானது என்பது எனக்கு எண்ணம். உங்கள் கவிதையில் நாயக/நாயகி பாவமும், ஜீ/ப/ ஆத்மா, பாவமும் மாறி மாறி ஒலிக்கிறது

மிகச்சிறந்த கவிதைகள். ஒருவேளை ஜெ.தளத்தில் வராமல், நானாக கண்டுபிடித்து படித்து இருந்தாலும், வாழ்த்தி இருப்பேன். ஜெ.வாழ்த்தியது எனக்கும் கூடுதல் மகிழ்ச்சி.தொடர்க……

*********