”இம்’ என்று அமைந்திருக்கும் ஆழ்கடல்’ பற்றி ஜெயமோகன் தளத்தில் கடலூர் சீனு எழுதிய எதிர்வினை:
இனிய ஜெயம்
ஒரு சிறிய பயணம். அதிகாலை குளிர் முகத்தை வருடும் வசதி கொண்ட ஜன்னலோர பேருந்து இருக்கை. உங்கள் தளத்தின் இன்றைய பதிவுகள் வழியே கல்பனா ஜெய்காந்த் அவர்களின் கவிதைகள் வாசித்தேன்.
நீண்ட நாள் கழித்து உங்கள் பரிந்துரை வழியே வாசிக்கப்புகுந்த கவிதைத் தொகுப்பு. கடந்த சில மாதங்களாக குறிப்பாக கொரானா முடக்க சூழலில் நான் கவனமாக தவிர்த்த பல விஷயங்களில் ஒன்று, வாசிச்சு சொல்லுங்க என்று எனக்கு அளிக்கப்பட்ட புதியவர்களின் கவிதைகள்.சில கவிதை நண்பர்கள் திமிரு புடிச்சவன் என்று கூட உள்ளுக்குள் கருதி இருக்க நியாயம் உண்டு. என்னளவில் இந்த கவிதை விஷயத்தில் மட்டும் என் அகம் மிகுந்த ஜாக்கிரதை கொண்டு விடுகிறது.
முதல் காரணம் மொழி. மொழி வழியே இலக்கியம் கண்ட உச்ச சாத்தியம் என்றால் அது கவிதைதான். ஆகவே ஒரு சிறந்த கவிதை அது மொழி வழியிலான வெளிப்பாடு என்ற வகையில் மிகுந்த நேர்மறை தாக்கம் அளிப்பது.
அதே போல முதிர்ச்சி குன்றிய கவிதை அதன் மொழி அளிக்கும் தாக்கம் வழியே மிகுந்த எதிர்மறை தாக்கத்தையும் அளிக்கும்.
தொடர் வாசிப்பின் வழியே ஒவ்வொரு வாசகனுக்கும் அவனது அக மொழி இயக்கத்தின் லாவகம் ஒன்று அவனுள் செயல்பட்டுக்கொண்டு இருக்கும். ஒரு நல்ல கவிதை அந்த லாவகத்துக்கு கிரியா ஊக்கி ஆக மாறுவதை போல, ஒரு முதிராக் கவிதை அந்த லாவத்தின் இயக்கத்தை இடை முறித்துவிடும் ஒன்றாக மாறி விடும். அடுத்த பாடல் பாட தயாராக இருக்கும் ஒரு பாடகனுக்கு குரல் சுருதி விட்டுப் போவதை போன்றது அது. மீண்டும் அக மொழியின் லாவக இயக்கத்தை மீட்க ஒரு வார கால தொடர் நவீன செவ்வியல் வாசிப்பு தேவையாகும்.
ஆக தொடர் வாசிப்பின் பகுதியாக என்னால் மோகன ரங்கன், இசை, தேவதேவன் போல மொழி திகைந்த ஆளுமைகளின் புதிய தொகுதிக்குள் ஐயமின்றி நுழைய முடியும். புதிய கவிஞரின் தொகுதி எனில் தளராத தயக்கம் ஒன்றே என் முன் நிற்கும்.
இரண்டாவது காரணம் நீங்கள் சொல்வது மாட்ரிக்ஸ் பட ஸ்மித் போல எல்லாமே ஒரே கவிதைகள். எல்லா கவிஞர்களுக்குமே ஒரே பிரச்சனை. இல்லாவிட்டால் மத்திய அரசை மல்லாக்க கவிழ்க்க வேண்டிய தேவைக்கு துணை நிற்கும் கவிதைகள், எதிர் கவிதைகள், பக்கவாட்டு கவிதைகள் என பீதிகளின் வெவ்வேறு வகை மாதிரிகள். இத்தகு நிலையில்தான் பரிந்துரைகளின் முக்கியத்துவம் கூடுகிறது.
அந்த பாதுகாப்பான பரிந்துரை பாதை வழியே நான் சென்றடைந்த நல்ல கவிதைத் தொகுப்பு என்று கல்பனா ஜெய்காந்த் அவர்களின் கவிதைத் தொகுப்பை சொல்வேன். பல வகையிலும் வேணு வெட்றாயன் அவர்களின் அலகில் அலகு கவிதைத் தொகுப்புடன் ஒப்பிட்டு உரையாடி ரசிக்கவேண்டிய நூல். எழுமொழியால், வடிவ கச்சிதத்தால், புதிய புதிய சொல்லிணைவால், தனித்தன்மை கொண்ட உணர்வுக் களத்தால் இந்த இரு தொகுதிகளையும் ஒப்பு நோக்கி உரையாடல் ஒன்றை திறக்க முடியும்.
ஒரே ஒரு இழை மட்டும் உடனடியாக சுட்ட தோன்றுகிறது. வேணு அவர்களின் கவிதைகளின் ஆத்மீக தளம் ஆண் என்ற (அல்லது சிவம்) தன்னிலையில் காலூன்றி எழுந்து பால் பேதமற்ற வெளியில் எழுந்து பறப்பது. அதே போல கல்பனா அவர்களின் கவிதைகளின் ஆத்மீக தளம் பெண்மை எனும் (அல்லது சக்தி) தன்னிலையில் துவங்கி பால் பேதமற்ற வெளியில் எழுந்து பறக்கிறது.
குறிப்பாக கல்பனா அவர்களின் தொகுதியின் முதல் இரண்டு கவிதைகளின் ஆத்மீக ஆழம். 44, மற்றும் 48 தவ நிலை என்பதன் இரு வேறு நிலைகளின் அற்புதக் கவிச் சாட்சியம். அகவயமாக ஆழம் நோக்கி பயணிக்கும் கவிதைகள் போலவே புற வயமாக முன்செல்லும் கவிதைகளும் அதன் சாரத்தை மொழியால் கூறு முறையால் சிரமம் ஏதும் இன்றி நிலை கொண்ட கவிஞரின் ஆளுமை கொண்டு சென்று தொட்டு விடுகிறார்.
அக உலகு, அகமும் புறமும் இணைந்த நிலை புற உலகு என்ற இந்த மூன்று நிலைக்கும் கல்பனா அவர்களின் மொழி ஒரு ஊஞ்சல் போல இயல்பாக அங்கும் இங்கும் சென்று வருகிறது.32,63,20 இந்த மூன்று கவிதைகளை இதே வரிசையில் வாசித்தால் மேற்ச்சொன்னா ஊஞ்சல் அசைவின் அழகை அறிய இயலும். உணர்வின் துல்லியத்தை அதன் வசீகரம் குன்றாமல் கையளிக்கிறது மொழியால் கூறுமுறையால் கச்சிதமான 67 ஆவது கவிதை.
இந்தத் தொகுப்பில் எனது கவிதை என்று இது நானேதான் என்று உளம் பூக்க வைத்த கவிதை 15 ஆவது கவிதை. எல்லா கவிஞர்களும்
கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதையேனும் மனதிற்குள் எழுதி அழித்திருப்பார்கள். நான் தனிப்பட்ட முறையில் கவிதை எனத் தலைப்பிட்டு அதன் கற்பனை சாத்தியத்தில் திளைத்த கவிதை 61 ஆவது கவிதை. மொழி வழியே போத மனம் கடந்து , அப்போத மனம் துளைத்து கவிதை சென்று தொடும் அந்த பரம்பொருளின் இணையடி, கவிதை எனும் அந்த கலை வடிவின் செயல் முறை எதுவோ அதுவான கவிதை,
நேராக நுழைந்த
கத்தி
செவி வழி
ஆன்மாவைத் தொட்டு
சொல்லாய்த்
தீயாய்
தலை வணங்கத்
திகழ்வதே
அது
பார்வையோ
வாசனையோ
அற்றவனின்
பாதமே
சென்னியில் அமைவது.
கவிதை
//சொல்லாய்த்
தீயாய்
தலைவணங்கத்
திகழ்வதே அது//
இல்லையா?.
கல்பனா ஜெயகாந்த் அவர்களுக்கு மென் மேலும் கவி சிறக்க வாழ்த்துக்களும் என்றென்றும் என் அன்பும்.
கடலூர் சீனு
கவிதைகளைப் பற்றி நண்பர் எம் எழுதிய கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில:
1)அன்புள்ள k j,
இன்று உங்களுடைய ‘அவன்’ என்ற கவிதையை வாசித்தேன்.
அவன்———-
எங்கும் இருண்டிருந்தது
அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போல
சட்டென்று அவன் இருப்பை உணர்ந்தேன்
‘யார் நீ’ என்றேன்
சலனமற்றிருந்தான்
அவன் யாரெனக் காண ஆவல்கொண்டேன்
அவனை நோக்கிச் செல்ல முயன்றேன்
பாழிருள்
வெளிச்சமேற்ற பல வகைகளில் முயன்றேன்
அவன் இருப்பை இழக்காதிருக்க
அவனையே அவதானித்திருந்தேன்
என்னுடையவை அனைத்தோடும்
அவனோடேயே இயைந்திருந்தேன்
சிறு வெளிச்சம் போதும்
அவனைப் பார்த்து விடுவேன்
ஒரு பெரும் மின்னல்
அவனைக் கண்டு விட்டேன்
ஆ..
அது நானே
***
இந்த கவிதையை நான் அணுகும் விதத்தை வாசிக்கும் முறையை தெரிவிக்கிறேன்.
1. இக்கவிதையின் தலைப்பு கவிதையின் ஒரு பகுதியாக உள்ளது. கவிதையை அர்த்தப்படுத்திக் கொள்வதன் முக்கியமான திறவுகோலும் கூட. ‘’அவன்’’ என்ற தலைப்பு ‘’நானே’’ என முடிகிறது. உபநிடதம் ‘’நீதான் அது’’ (தத்வமஸி) என சுட்டுகிறது. இக்கவிதை ‘’அது நானே’’ என்னும் இடத்துக்குச் செல்கிறது. இக்கவிதையில் தலைப்பு முக்கியமானது.
2. ‘’எங்கும் இருண்டிருந்தது’’ இது எவ்வகையான நிலம் – எந்த காலம் என்று வாசகனைக் கற்பனை செய்ய வைக்கும் வரி. ஒருவிதமான நிலையின்மையை வாசகன் உணரக் கூடும்.
3. ‘’அவன் என்னையே பார்த்துக் கொண்டிருப்பான் போல’’ . இந்த வரியில் ‘’போல’’ என்ற உருபைச் சேர்த்தது மிகவும் பொருத்தமானது. அது அப்படியும் இருக்கலாம்; அப்படி இல்லாமலும் இருக்கலாம் என்ற உறுதியின்மையை உருவாக்குகிறது.
முதல் வரயில் ‘’நிலையின்மை’’. இரண்டாம் வரியில் ‘’உறுதியின்மை’’.
4.’’ சட்டென்று அவன் இருப்பை உணர்ந்தேன்’’. ‘’உணர்தல்’’
5. ’’யார் நீ’’ என்றேன். ‘’உரையாடல்’’. ‘’வினவுதல்’’ . இந்த வினா எவ்வாறு எழுப்பப்பட்டிருக்கும் என்பதற்கான சாத்தியங்களை வாசகன் கற்பனை செய்து கொள்ள வேண்டும். சினத்துடன் எழுப்பப்பட்டதா சஞ்சலத்துடன் எழுப்பப்பட்டதா மெல்ல கேட்கப்பட்டதா என. எப்படியாயினும் சலனமுற்ற கேள்வி.
6. ’’சலனமற்றிருந்தான்’’ . சலனமற்றிருக்கும் அவன் யார்? சலனமின்மையை இருப்பாகக் கொண்டிருக்கும் அவன் யார்? வாசகன் மனத்தில் கேள்விகள்
7. பின்னர் உருவாவது ஆவல். அதன் பின் முயற்சி. எனினும் உணர்வது ‘’பாழிருள்’’
8. உங்கள் கவிதையை ஒரு வளையம் எனக் கொண்டால் முதல் வரியிலிருந்து ‘’பாழிருள்’’ என்னும் வரி வரையான வரை அதனுள் இயங்கும் சிறு பின்னல்.
நீங்கள் சித்தரிப்புகளின் வழியாக உணர்வை உருவாக்குகிறீர்கள். எவ்வித அடையாளங்களும் இல்லாத சித்தரிப்புகள். எல்லா அடையாளங்களுக்கும் பொருந்தும் சித்தரிப்புகள்.
9. அதன் பின் முயற்சி. தவிப்பு. ‘’சிறு வெளிச்சத்துக்கான’’ ஏக்கம்.
10. ஒரு பெரும் மின்னல்
11. கண்டடைதல்
12. தன்னை உணர்தல்
13. அது நிகழ்ந்ததன் மாயத் தன்மை.
14. வளையம் நிறைவாகும் விதம்.
உங்கள் கவிதை சில வரிகளில் காட்டும் காட்சிகளும் நிலமும் உணர்வுகளும் அவற்றுக்குள் இருக்கும் ஒருங்கமைப்பும் மிகச் சிறப்பானது.
சொல் கவிதையாவதன் மாயம் போல தன்னை உணர்தலின் மாயமும் இருக்கிறது.
நல்ல கவிதை.
அன்புடன்,
எம்
******
அன்புள்ள kj அவர்களுக்கு,
‘சித்திரம்’ கவிதை வாசித்தேன்.
Micro Narration-ல் நீங்கள் ஒரு தனி பாணியை கைக்கொள்கிறீர்கள்.
குழந்தைகள் அறை. அறையின் சுவர்கள் உருவாக்கும் எல்லைகளைக் கடந்து செல்லும் அகம் கொண்ட குழந்தைகள் குதூகலத்தின் உலகை அவ்வப்போது அங்கு உருவாக்குகிறார்கள்.
அந்த உலகை Wall paperல் இருக்கும் பிராணிகள் வாஞ்சையுடன் தினமும் பார்க்கின்றன. ஒட்டகச் சிவிங்கியும் மானும் முயலும் உறைந்திருக்க யானை மட்டும் அறைக்குள் வருகிறது. சின்னக் குழந்தைகளின் உலகில் இணைந்து கொள்ள விழையும் அந்த ஆனையைக் குறித்து கற்பனை செய்து கொள்ளும் சுதந்திரத்தை வாசகனுக்கு உங்கள் பிரதி அளிக்கிறது.
பிளிறலும் நடனமும் உருவாக்கும் திகைப்பில் அறையை விட்டு வெளியே ஓடுகின்றனர் குழந்தைகள். அதுவும் ஆட்டத்தின் ஒரு பகுதியே.
யானை சுவருக்குள் செல்கிறது. அதில் ஒரு மெல்லிய துக்கம் இருக்கிறது. அவ்வாறான ஒரு வாசிப்புக்கும் கவிதை இடம் தருகிறது.
நான் அந்த யானையின் பிரியம் குழந்தைகளையும் தன் உலகுக்குள் கொண்டு வர முடியும் என்றும் மேலும் சுவர்களுக்கு அப்பால் இருக்கும் எல்லையின்மையின் உலகுக்குள்ளும் குழந்தைகளையும் தன்னையும் இட்டுச் செல்லும் என்று என் கவிதை வாசிப்பில் கற்பனை செய்து கொண்டேன். அவ்வாறான வாசிப்புக்கும் உங்கள் கவிதை இடம் தருகிறது.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
எம்
*******
அன்புள்ள kj,
‘’பாம்பின் தலை’’ வாசித்தேன்.
நதியின் ஓட்டத்தில் சின்னஞ்சிறு சுழல்கள் உருவாகும். மிதக்கும் இலைகளை அமிழ்த்தும் சுழல்கள் – நதியின் விளையாட்டு போல. நதியின் சிறு ஆடல் என்று வாசிப்பில் தோன்றியது.
அன்புடன்,
எம்
*******
மாஷா,
‘களம்’ வாசித்தேன்.
ஒரு ஜென் கவிதை ‘களம்’ வாசிப்பில் இணைந்து கொண்டது.
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும்
ஒரு ஈயை அடித்துக் கொன்று
ஒரு எறும்புக்குவழங்குகிறேன்
அன்புடன்,
எம்
*******
Masha,
’’அன்னம்’’ கவிதை சிறப்பாக இருந்தது.
சித்தரிக்கும் குரல் யாருடையது? அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.
சித்தரிக்கப்படுவது யார்? அன்னை? பாட்டி? சிறு வயதில் தூக்கி வளர்த்த பெண்? கலைமகள்? திருமகள்?
பிரியத்துடன் அவள் இடும் ‘’அன்னம்’’ உடலுக்கானதா? ஆன்மாவுக்கானதா?
எல்லா சாத்தியங்களுக்கும் உங்கள் பிரதி வாய்ப்பளிக்கிறது. நல்ல கவிதை.
அன்புடன்,
எம்
*******
மாஷா,
பெருநதியின் நீரோட்டம். கணங்களால் நீளும் ஒரு வாழ்வின் மன ஓட்டம்.
நதி பார்க்கும் போது ஒத்திசையும் மனமும் நீரும். அப்போது நீர்ப்பெருக்கில் ஒரு சுழல். மனதில் ஒரு சிறப்பான ஞாபகம்.
சுழல் சமனாகி விடும். ஞாபகமும் சமனாகும்.
என்றாலும் மீண்டும் சுழல் உருவாகும். இனிய ஞாபகம் மீண்டும் எழும்.
சுழல் நதியின் ஆடல். இனிமை ஜீவ லீலை.
அன்புடன்,
எம்
குறிப்பு: வாழ்வின் அன்றாடத்திலிருப்பவற்றைப் படிமங்களாக மாற்றுவது மிக மிக நுட்பமான விஷயம். ‘’அச்சு’’ல் அதை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.
*********
Msa,
Good Morning.
’’காதலே தான்’’ கவிதை வாசித்தேன்.
மிக உக்கிரமான கவிதை. உங்கள் கவிதைகளின் தனித்தன்மை என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிமங்கள். அவை இயல்பானவையாக எல்லாருக்கும் தெரிந்ததாக இருப்பவை . உங்கள் கவிதைக்குள் அவை அவர்கள் பார்க்கத் தவறும் எனினும் அவர்கள் கண் முன் இருக்கும் ஒன்றாக வெளிப்படுகின்றன. நீங்கள் அதனை வலிய திட்டமிடுவதில்லை; இயல்பாக நிகழ்கிறது என்பது அதன் சிறப்பு.
இந்த கவிதை வலியையும் துக்கத்தையும் தீவிரமாக உணர வைத்தது.
மழை நாள், மணியறை, நகைகள் ஆகியவை வலியாக ஆகும் அடர்த்தி மிக்க தருணம் வெளிப்பட்டுள்ளது.
சில வரிகளை எடிட் செய்து கொண்டேன்! பழக்க தோஷம்!! என்ன செய்வது? நீங்கள் கேட்டால் அதனைச் சொல்கிறேன்!
அன்புடன்,
எம்
********
(தங்கக் கூண்டு கவிதை குறித்து)
மாஷா,
இன்றைய கவிதை நன்றாக இருந்தது.
வாழ்க்கை குறித்து லௌகிகம் குறித்து மனித சுபாவம் குறித்து கவிஞனின் வேறுபட்ட கோணம் சற்று வித்தியாசமான பார்வையில் வெளிப்பட்டுள்ளது.
சவாலான கவிதை மாஷா.
அன்புடன்,எம்
*****
மாஷா,
‘’பித்தம்’’ கவிதை வாசித்தேன். உள நாடகம் – பரிதவிப்பு – நிலை கொள்ளாமை என சகல விதமான உணர்வுகளும் சில வரிகளில் கொண்டு வந்துள்ளீர்கள். மேடையில் இருப்பது யார்? வந்தது யார்? எண்ணற்ற சாத்தியங்கள். நல்ல கவிதை மாஷா.
அன்புடன்,
எம்
**********
மாஷா,
நமஸ்காரம்.
‘’கேள்வி’’ மிகச் சிறப்பான கவிதை.
அவ்வப்போது நீங்கள் பேராச்சர்யத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
அந்த கேள்வி என்ன என்பது பல்வேறு பதில்களை உண்டாக்குகிறது. ஒரு ஜீவனை இத்தனை உணர்ச்சி கொள்ளச் செய்யும் – அரற்றச் செய்யும் அந்த கேள்வி அல்லது கேள்விகள் ஏன் அத்தனை அபூர்வமாகக் கேட்கப்படுகிறது என்பது சிந்தித்து சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.
அந்த கேள்வி என்னவாயிருக்கும் என நான் சில சாத்தியங்களை யோசித்தேன்.
‘’ஓப்பன் எண்டிங்’’ ஆக நீங்கள் விட்டிருப்பதை அப்படியே – நானும் யோசித்ததைச் சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.
அன்புடன்,
எம்
நன்றி.. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறானது அல்லவா?
கல்பனா
********