அஷ்டபதி 8-நிந்ததி சந்தன(யமுனா தீரே)

யமுனா தீரவானீர நிகுஞ்ஜே மந்தம் ஆஸ்திதம்
ப்ராஹ ப்ரேம பரோத் ப்ராந்தம் மாதவம் ராதிகா ஸகீ

ராதையின் தோழி, யமுனையின் கரையில் அமைந்த பிரம்பு குடிலில், மெதுவாக வந்தமர்ந்த, பிரேமையால் நிறைந்த, மனக் குழப்பத்திலிருந்த, மாதவனைப் பார்த்து, நன்றாகச் சொன்னாள்:

நிந்ததி சந்தனம் இந்து கிரணம் அனுவிந்ததி கேத மதீரம்
வ்யாள நிலய மிளலேன கரளமிவ கலயதி மலய ஸமீரம்

சந்தனத்தை வெறுக்கிறாள், நிலவின் ஒளியையும் வெறுக்கிறாள்; தைரியமில்லாமல் மிகுந்த சோகத்தை அனுபவிக்கிறாள் ; சர்ப்பங்கள் சூழ இருக்கும் மலையிலிருந்து வீசுவதால், மலைக் காற்றையும் விஷமென நினைக்கிறாள்.

ஸா விரஹே தவ தீனா
மாதவ மனஸிஜ விஸிக பயாதிவ பாவனயா த்வயி லீனா(ஸா)

ஹே கிருஷ்ணா அவள் உனக்கான விரஹத்தால் மெலிந்திருக்கிறாள்; மனதில் உதித்தவனான, மன்மதனின் கூர்மையான பாணங்களைக் கண்டு பயப் படுவதால், உணர்வுகளால் உன்னிலேயே ஆழ்ந்திருக்கிறாள்.

அவிரள நிபதித மதன ஸராதிவ பவதவனாய விஸாலம்
ஸ்வஹ்ருதய மர்மணி வர்ம கரோதி ஸஜல நளிநீதள ஜாலம்
(ஸா)

இடைவிடாது பெய்யும் மன்மதனின் பாணங்களிலிருந்து தன் மனதின் மர்மமான இடத்தில் இருக்கும் உன்னைக் காப்பாற்ற, பெரிய தண்ணீரோடு இருக்கும் தாமரையின் இலையினால் ஆன கேடயத்தைச் செய்கிறாள்.

குஸும விஸிக ஸரதல்ப மனல்ப விலாஸ கலா கமனீயம்
வ்ரதமிவ தவ பரிரம்ப ஸுகாய கரோதி குஸும ஸயனீயம்(ஸா)

கூர்மையான முனைகளையுடைய மலர்களால் ஆன, சிறியதாயில்லாமல், அகன்றிருக்கும் படி, அழகான மலர் படுக்கையை, ஒரு விரதம் போல, உன்னுடைய அணைப்பென்னும் சுகத்திற்காக தயார் செய்கிறாள்.

வஹதிச களித விலோசன ஜலபரம் ஆனன கமலம் உதாரம்
விதுமிவ விகட விதுந்தத தந்த தளன களிதாம்ருததாரம்(ஸா)

கோணலான நிலவை விழுங்குபவனின்-ராகுவின் பற்களால் கடிக்கப்பட்ட நிலவிலிருந்து பெருகும் அமுத தாரையைப் போல, அவளின் தாமரையைப் போன்ற அழகிய முகத்தில் இருக்கும் நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கரிய சுற்றும் விழிகளிலிருந்து கண்ணீர் பெருகுகிறது.

விலிகதி ரஹஸி குரங்கமதேன பவந்தம் அஸமஸர பூதம்
ப்ரணமதி மகரம் அதோ வினிதாய கரே ச ஸரம் நவசூதம்(ஸா)

அவள் தன் தனிமையில், கஸ்தூரியால் உன்னை ஒப்பற்ற வில் கொண்ட மன்மதனாக வரைகிறாள்; கீழே ஆசனத்திற்கு முதலையை வரைகிறாள்; கையில் புதிய மாவிலை அம்பை வரைகிறாள்; எல்லாவற்றையும் நன்கு வரைந்துவிட்டு பணிவுடன் நமஸ்கரிக்கிறாள்.

ப்ரதிபதம் இதமபி நிகததி மாதவ தவ சரணே பதிதாஹம்
த்வயி விமுகே மயி ஸபதி ஸுதாநிதிரபி தனுதே தனுதாஹம்

அவள் ஒவ்வொரு அடியிலும் இவ்வாறு கூறுகிறாள்-‘மாதவனே, உன் சரணத்தில் விழுந்து விட்டேன்; இப்பொழுது நீயோ என்னிடம் பாரமுகம் ஆகிவிட்டாய்; அமுதத்தை பெருக்கும் நிலவில் கூட, மன்மதனால் உண்டாகும் தாபம் பெருகுகிறது’.

த்யான லயேன புர: பரி கல்ப்ய பவந்தம் அதீவ துராபம்
விலபதி ஹஸதி விஷீததி ரோதிதி சஞ்சதி முஞ்சதி தாபம்(ஸா)

அவள் தியான லயத்தில் ஆழ்ந்து, தன் முன்னே கிடைப்பதற்கு அரிதான உன்னை கற்பனை செய்து கொண்டு, உன்னிடம் பேசுகிறாள், சிரிக்கிறாள், சோகத்தில் மூழ்குகிறாள், அழுகிறாள், அங்கிருந்து அகல்கிறாள், பின் உன்னிடமே அடைக்கலம் ஆகிறாள்.

ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் அதிகம் யதி மனஸா நடனீயம்

ஹரி விரஹாகுல வல்லவ யுவதி ஸகீ வசனம் படனீயம்(ஸா)

ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட இதை அதிகமாக மனதில் நினைத்துப் பார்க்க வேண்டும்; ஹரியின் மேல் விரஹ தாபத்தில் உள்ள ஆயர்குல யுவதியின்(ராதையின்) தோழியின் மொழியை வாசிக்க வேண்டும்