குமிழிகள்-ஜெயமோகன்-சிறுகதை விமர்சனம்

இக்கதை ‘தன்னை மற்றவர் முன் கட்டமைத்துக் கொள்வது’ மற்றும் ‘தன் உடல் பற்றிய முடிவுகளை தானே எடுப்பது’ என்ற இரண்டு முக்கியமான கருதுகோள்களைப் பற்றிப் பேசுகிறது.

சாமி நாதன், லலிதா என்ற தம்பதியர் தங்கள் பெயரை சாம், லிலி என்று சுருக்கி வைத்துக் கொள்வதிலிருந்தே தொடங்கி விடுகிறது கதை. தான் எப்படி present ஆகிறோம் என்பதே லிலியின் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. தன்னை present செய்து கொள்வதை வேஷம் கட்டிக் கொள்வது என்கிறான் சாம். இது என்னுடைய உடல், என் விருப்பம் என்கிறாள் லிலி. என் காமத்தின் ஸ்தூல உருவம் உன் உடல், அதனால் எனக்கும் stake இருக்கிறது என்கிறான் சாம். இருவரும் இரு வேறு நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தம்பதிகளாய் இருப்பதால் அவர்களுக்குள் அத்தனை வயது வித்தியாசம் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தும் ஒருவர் காலத்தில் பின் தங்கியும் மற்றவர் காலத்தை விட முன் சென்று விடுவதுமாக இருப்பது அவர்களிடையே இருக்கும் ஒரு முக்கிய சிக்கல்.

தன்னை கட்டமைத்துக் காட்டுவது என்பது சரியான கண்ணோட்டமா, வேஷம் போட்டுக் கொள்ளுதல் ஆகாதா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள் தான். ஆனால் அதனால் தான், தன்னுடைய தொழிற்சார் முன்னேற்றம் இருக்க முடியும் என்பது லிலியின் தரப்பு. இக்காலத்தில் அது ஓரளவு உண்மையும் கூட. அழகுக் கலை நிபுணரிடம் செல்வது என்பது இக்காலத்தில் சாதாரணமான ஒன்று. அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து ப்ளாஸ்டிக் ஸர்ஜரி வரை கொண்டு செல்கிறாள் அவள். இந்த நீட்டிப்பு தான் சாம்-ஐ தொந்திரவு செய்கிறது, அதுவும் தான் நேரடியாக பாதிக்கப்படும் போது.

சாதாரண கூகிள் தேடல் செய்தாலேயே இந்த சர்ஜரி பெரிதாக நார்மல் வாழ்க்கையை பாதிப்பதில்லை என்று தெரிகிறது. ஒரு டெக்னாலஜி மக்களின் தினப்படி வாழ்க்கையை பெரிய அளவுக்கு பாதிக்குமானால், அது உயிர்த்திருக்க முடியாது. பொருளாதார வெற்றியும் பெற முடியாது. அப்படியிருக்கும் போது லிலி ஏன் அவ்வாறு கூறுகிறாள்.

இந்தத் தகவலை லிலி வேண்டுமென்றே தருகிறாள் என்று கொண்டால், அவள் சாமுக்கு தன் மீதுள்ள ஆதிக்கத்தை குறைக்க நினைக்கிறாள் என்றாகிறது. அவனுக்கு மிகவும் பிடித்த மூக்கை முதலில் ஸர்ஜரி செய்து கொண்டு, அவனைத் தொட விடாமல் செய்கிறாள். அடுத்ததாக இது. அவள் ஒரு rebellion mode-ல் இருக்கிறாள். தன்னை இளமையாக கவர்ச்சியாக present செய்து கொள்ளவும் வேண்டும், அவனுடனான உறவு அவள் நினைத்தது போல் இருக்கவும் வேண்டும், அவளுக்கு.

கணவன் மனைவியின் உடலைத் தன் உடைமையாக பார்ப்பது என்ற நிலையிலிருந்து முன்னேறி அவரவரே தங்கள் உடலுக்கு அதிகாரியாவது என்பது முன்னேற்றம் தான். ஆனால், லிலி சாமிடம் கமிட் ஆகியிருக்கிறாள். அவள் எடுக்கும் முடிவினால் சில காலம் தான் என்றாலும் பாதிக்கப்படப் படுபவன் சாம். அவனை கருத்தில் கொள்ளாமல் தன்னை prioritize செய்கிறாள் லிலி. அது அவளுடைய சுயமைய நோக்கு. சாமும் தன் உணர்வுகளுக்கு வடிகால் இல்லாமல் ஆகி விடும் என்று நினைக்கிறானே ஒழிய அவளுடைய அழகுணர்வையோ passion-ஐயோ சட்டை செய்வதில்லை. எங்கோ அவன் அவளுக்கு match up செய்யத் தவறியிருக்கிறான். அவனுக்கு இருப்பதும் சுயமைய நோக்கு தான்.

சுயமைய நோக்கிருந்தால் எந்த உறவும் நீடிக்க வழியில்லை. இந்த dysfunctional குடும்பம் technology யாலோ, மாடர்ன் கருதுகோளினாலோ உண்டானது இல்லை. அவனுடைய காலங்காலமான சுயமைய நோக்கிற்கு அவளுடைய பதிலடியான சுயமைய நோக்கினால் உருவாவது.

இத்தனை நாட்களாக சாம் தன் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வந்தான். லிலி தன் profession-க்கும், முன்னேற்றத்துக்கும், தோற்றத்துக்கும் முன்னுரிமை அளிக்கிறாள். இச்சிக்கலுக்கு அவர்களிடையே உள்ள காதலில்லாத் திருமணமும்(முன்பு இருந்திருந்தால் இப்போது இல்லை) முக்கியமான காரணம். அவர்களிடையே காதல் இல்லாமல் ஆனது தான் அவர்களின் சுயமைய நோக்குக்கும் காரணம்.