குள்ளக் குளிர குளிப்பாட்டினர்
கழுத்தில் மாலையணிவித்தனர்
நெற்றியில் குங்குமம் இட்டனர்
நிறக்க உணவளித்தனர்
கொட்டு முழக்கோடு ஊர்வலம் விட்டனர்
விழுந்து விழுந்து கும்பிட்டனர்
மலைத்துப் போய் விழித்துப் பார்த்தேன்
எனக்கா
இவையனைத்தும் எனக்கா
தெய்வமா நான்
மேள தாளமும்
அகில் புகையும்
தீப ஆரத்தியும்
ஆஹா..
தெய்வமாகவே உணர்ந்தேன்
கல்லெனச் சமைந்தேன்
அசையாத் தலையைக் கண்டு
மெல்ல மெல்ல பதற்றம் ஏற
மேலும் மேலும் நீர் தெளித்தனர்
சிலர் வெறி கொண்டு ஆடினர்
சிலர் பிழை பொறுக்க கண்ணீருடன் வணங்கினர்
நான் மெல்ல சிரித்துக் கொண்டேன்
வெளித் தெரியாதபடி