
விஹரதி வனே ராதா ஸாதாரண ப்ரணயே ஹரௌ
விகளித நிஜோத்கர்ஷாத் ஈர்ஷ்யாவஸேன கதா அன்யத:
க்வசிதபி லதா குஞ்ஜே குஞ்ஜன மதுவ்ரத மண்டலீ
முகர ஸிகரே லீனா தீனாப்யுவாச ரஹ: ஸகீம்
வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ராதை, ஹரி தனக்கும், எல்லா கோபிகைகளுக்கும் சமமாய் பிரேமையைக் காண்பித்ததால், சோர்வுற்று, தன்னிடத்திலே எழுந்த பொறாமையால், அங்கிருந்து அகன்று, வேறெங்கோ. சப்திக்கும் வண்டுக் கூட்டங்கள் மொய்க்கும், ஓசைமிகுந்த கொடிப் பந்தலினுள், நுழைந்து கொண்டு, தீனமாகவும் தனியாகவும் உணர்ந்து, ரகசியமாக தன் தோழியிடத்தில் இவ்வாறு கூறினாள்:
ஸஞ்சரத தர ஸுதா மதுரத்வனி முகரித மோஹன வம்சம்
சலித த்ருகஞ்ல சஞ்சல மௌளி கபோல விலோல வதம்ஸம்
துடிக்கும் உதடுகளால், தேனைப் போன்ற இனிய ஓசையை,மோகன வம்சம் என்னும் தன் குழலிலிருந்து எழுப்பிய படி, அசையும் தலையையும், ஆடும் குழைகளால் பளிச்சிடும் கன்னத்தையும் உடையவனான கண்ணன், சுற்றிலும் தன் கண்களை சுழல விடுகிறான்.
ராஸே ஹரிமிஹ விஹித விலாஸம்
ஸ்மரதி மனோ மம க்ருத பரிஹாஸம்
ஹரி ராஸக் கிரீடையில் இங்கனம் களித்து மகிழ்ந்து என்னை பரிஹாசம் செய்கிறான், இருந்தும் என் மனமோ அவனையே ஸதா நினைத்துக் கொண்டிருக்கிறது.
சந்த்ரக சாரு மயூர ஸிகண்டக மண்டல வலயித கேஸம்
ப்ரசுர புரந்தர தனுரனுரஞ்ஜித மேதுர முதிர ஸுவேஷம்
அழகிய கண்களையுடைய மயிலிறகுகளாலான வளையத்தால் வளைக்கப்பட்ட அவனின் கருத்த கேசம், புரந்தரனின்(இந்திரனின்) மிகப்பெரிய வானவில்லை ஆடையாக அணிந்த கருநீல முகிலைப் போல் உள்ளது. அத்தகையவனான (ஹரி, ராஸே..)
கோபகதம்ப நிதம்ப வதீமுக சும்பன லம்பித லோபம்
பந்து ஜீவ மதுராதர பல்லவ கலித தரஸ்மித ஸோபம்
சிறந்த பின்னழகைக் கொண்ட(நிதம்பவதி) அநேக கோபிகைகளால் முகத்தில் முத்தப்படுவதில் ஆசைக் கொணடவனும், பந்தூக மலர்களைப் போன்று சிவந்தும், இளந்தளிரைப் போன்ற சிறிய அதரத்தால்(கீழுதடால்) ஜொலிப்பவனுமான (ஹரி, ராஸே..)
விபுல புலகபுஜ பல்லவ வலயித வல்லவ யுவதி ஸஹஸ்ரம்
கரசரணோரஸி மணிகண பூஷண கிரண விபின்ன தமிஸ்ரம்
புளகாங்கிதமடைந்த, ஆயிரக் கணக்கான இளம் கோபிகைகளின், மெல்லிய தளிர்களைப் போன்ற புஜங்களால் ஆலிங்கனம் செய்யப் பட்டவனும், கை-கால்-மார்பு ஆகியவற்றில் அணிந்த அணிகளின் ஒளிக்கிரணங்களால் இருளை விலகச் செய்பவனுமான (ஹரி ராஸே..)
ஜலத படல சல திந்து விநிந்தக சந்தன பிந்து லலாடம்
பீன பயோதர பரிஸரமர்தன நிர்தய ஹ்ருதய கவாடம்
துளி சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட அவன் நெற்றி, மேகக் கூட்டத்தில் தவழும் நிலவை நிந்தனை செய்கிறது. ஸ்தனங்களால்(பீன பயோதர) சூழப்பட்டு கூழாக்கப்பட்டும் அவன் இரக்கமற்ற இதயக் கதவையுடையவனாக இருக்கிறான். அப்படிப்பட்ட (ஹரி, ராஸே..)
மணிமய மகர மனோஹர குண்டல மண்டித கண்ட முதாரம்
பீதவஸனம் அனுகத முனிமனுஜ ஸுராஸுர வர பரிவாரம்
மணிகள் நிறைந்த அழகிய மகர குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னங்களுடையவனும், மஞ்சள் ஆடை அணிந்தவனுமான அவன் பின் முனிவர்கள், மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் மற்றும் அனைத்து மேன்மை பொருந்தினவர்களும் செல்கிறார்கள். அப்படிப்பட்ட(ஹரி, ராஸே..)
விஸத கதம்ப தலே மிளிதம் கலிகலுஷபயம் ஸமயந்தம்
மாமபி கிமபி தரங்க தனங்க த்ருஸா வபுஷா ரமயந்தம்
அழகிய கதம்ப மரத்தடியில் என்னை சந்திப்பவனும், கலி தோஷ பயங்களை போக்குபவனும், மன்மதனின் பார்வை என்னும் அலையால் மனதார என்னையும் ஆனந்தப்படுத்துபவனுமான (ஹரி, ராஸே..)
ஸ்ரீ ஜயதேவ பணிதம் அதி ஸுந்தர மோஹன மதுரிபு ரூபம்
ஹரிசரண ஸ்மரணம் ப்ரதி ஸம்ப்ரதி புண்யவதாமனுரூபம்
ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட மிகுந்த அழகு வாய்ந்த மதுரிபுவின்(மது என்னும் அரக்கனின் எதிரி) உருவமும், ஹரியின் பாதங்களும், புண்யாத்மாக்களால் இப்போதும் ஸ்மரிக்கப்பட உகந்தது.