அஷ்டபதி 3-லலித லவங்க..

வஸந்தே வாஸந்தி குஸும ஸுகுமாரை: அவயவை:
ப்ரமந்தீம் காந்தாரே பஹுவிஹித க்ருஷ்ணாநுஸரணாம்
அமந்தம் கந்தர்பஜ்வர ஜனித சிந்தாகுலதயா
வலத்பாதாம் ராதாம் ஸரஸமிதம் ஊசே ஸஹசரீ

வஸந்த காலத்தில் மலரும் வாஸந்தி மலரைப் போன்ற மிருதுவான அழகான அவயவங்களையுடையவளான ராதை தன் கிருஷ்ணனுக்காக ஏங்கி அவனைத் தேடி மன்மதனால் உண்டான ஜ்வரத்தோடு ப்ருந்தாவனத்தில் அலைந்து கொண்டிருந்தாள். அதைக் கண்ட அவளுடைய தோழி இவ்வார்த்தைகளால் ராதையை சமாதானப் படுத்தினாள்.

லலித லவங்க லதா பரிஸீலன கோமள மலய ஸமீரே
மதுகர நிகர கரம்பித கோகில கூஜித குஞ்ஜ குவ்டீரே

மெல்லிய லவங்கக் கொடிகளைத் தழுவிய படி மலைய மாருதம் வீசிக் கொண்டிருக்கிறது. குயில்கள் கூவும் குரலும் வண்டுகளின் முரள்தலும் கொடிப் பந்தல்களில் கேட்டபடி இருக்கின்றன. அங்கே,

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதி ஜனேன சமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே ராதே

இந்த இனிய வஸந்த காலத்தில், கிருஷ்ணன் யுவதிகளான கோபிகைகளுடன் ஆடிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறான். வா ராதே, விரஹத்தால் துக்கம் கொண்டுள்ள நாம் அங்கு செல்வோம்.

உன்மத மதன மனோரத பதிகவ தூஜன ஜனித விலாபே
அளிகுல ஸங்குல குஸும ஸமூஹ நிராகுல வகுள கலாபே

தங்கள் காதலர்களிடமிருந்து பிரிந்ததால் மன்மதனின் மனோரதத்துக்கு ஆட்பட்ட யுவதிகள் துக்கம் கொள்ளும், வகுள மலர்க் கொத்துகளை மொய்த்து துன்புறுத்தும் வண்டுகளின் சப்தம் உண்டாகும் (இந்த இனிய வஸந்த காலத்தில்..)

ம்ருகமத ஸௌரப ரபஸ வஸம்வத நவதள மால தமாலே
யுவஜன ஹ்ருதய விதாரண மனஸிஜ நகருசி கிம்ஸுக ஜாலே

தமால, கிம்சுக மரங்களில் கஸ்தூரியின் மணம் வீசுகிறது. மாலைகள் எனத் தோன்றும் தமால மரங்களின் புத்தம்புதிய தளிர்களின் வரிசையிலும், காதலர்களின் மனதை குத்திக் கிழித்ததால் சிவந்த மன்மதனின் நகங்களைப் போல சிவந்திருக்கும் கிம்சுக மலர்களிலும் (இந்த இனிய வஸந்த காலத்தில்..)

மதன மஹீபதி கனக தண்டருசி கேஸர குஸும விகாஸே
மிளித ஸிலீமுக பாடல படல க்ருதஸ்மர தூண விலாஸே

மன்மதனாகிய அரசனின் பொன் தடியைப்போல் உள்ள பொன்னிற கேசரி புஷ்பங்களில்,
அம்புகளைப் போன்ற வண்டுகளுடன் கூடிய மன்மதனின் அம்பறாத்தூணி என பிரகாசிக்கும் பாடல புஷ்பங்களில் (இந்த இனிய வஸந்த காலத்தில்..)

விகளித லஜ்ஜித ஜகதவ லோகன தருண கருண க்ருத ஹாஸே
விரஹி நிக்ருந்தன குந்தமுகாக்ருதி கேதகி தந்ததுரி தாஸே

வெட்கத்தை விட்ட யுவதிகளைப் பார்த்து சிரிப்பதைப்போன்று தோன்றும் வெண்மையான கருண மலர்களில், விரகத்தால் வாடுபவர் ஹ்ருதயத்தை கிழிப்பதைப் போன்ற ஈட்டியை ஒத்த முட்களை உடைய தாழம்பூக்களின் வாசத்தால் சூழப்பட்ட திசைகளில் (இந்த இனிய வஸந்த காலத்தில்..)

மாதவிகா பரிமள மிளிதே நவ மாலிகயாதி ஸுகந்தௌ
முனி மனஸாமபி மோஹன காரிணி தருணா காரண பந்தௌ

மாதவிகொடியில் பரிமளிக்கும் மலர்களிலும், புதிய மல்லிகை போன்றவைகளின் மணத்திலும், முனிவர்களின் மனதைக்கூட மயக்கச்செய்வதும் இளைஞர்களுக்கு
இயற்கையிலேயே இனியதும் ஆன (இந்த இனிய வஸந்த காலத்தில்..)

ஸ்புரததி முக்த லதா பரிரம்பண முகுளித புலகித சூதே
ப்ருந்தாவன விபினே பரிஸர பரிகத யமுனா ஜல பூதே

அசைகின்ற மாதவிக்கொடியால் தழுவப்பட்டதால், புல்லரித்தது போன்று மொட்டுக்களைக் கொண்ட மாமரங்களை உடைய, யமுனையின் நீரால் புனிதமாக்கப்பட்ட, பிருந்தாவனமாகிய காட்டில், அன்பு கொண்டவர்களால் சூழப்பட்டு ( இந்த இனிய வஸந்த காலத்தில்..),

ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் உதயதி ஹரி சரண ஸ்ம்ருதி ஸாரம்
ஸரஸ வஸந்த ஸமய வன வர்ணனம் அனுகத மதன விகாரம்

ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட இந்த சுவையான வசந்த கால வர்ணனை, ராதையின் விரகத்தைக் கூறுவதாகவும். ஹரிசரணத்யானத்தின் சாரமாகவும் சிறப்புடன் விளங்குகின்றது.

கீழேயுள்ள விஜய் யேசுதாஸ் பாடியுள்ள ‘லலித லவங்க..’ அஷ்டபதியும் அற்புதமானது. மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தையாக இல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் காவிய ரசனைக்குத் தக்கவாறு வித்தியாசமான கோணத்தில் அமைந்துள்ளது. காணொளியில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பூக்களின் காட்சிகள் சுவையூட்டுபவையாக உள்ளன.