புற்கள் காடாய் மண்டியிருந்தன
நடுவே
பெருஞ்சிங்கமொன்றும்
புள்ளி மானொன்றும்
அருகருகே நடந்து கொண்டிருந்தன
மான் காதுகளை ஆட்டி
கண்களைச் சுழற்றி
தீவிரமாக ஏதோ
பேசிக் கொண்டிருந்தது
பிடரி மயிர் சிலிர்க்க
தலை குனிந்து
கேட்டுக் கொண்டிருந்த
சிங்கம்
மெல்லத் தரையில் அமர்ந்தது
மான் அதன் மேல் ஏறி
குதித்து விளையாடி
பின்
மெல்ல அதன் காதோரம்
இன்னும்
ஏதோ சொன்னது
கண்களில் நீர் வழிய
தரையில் தலை வைத்து
சாய்ந்தது சிங்கம்
அதன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு
திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறே
நடந்து சென்ற மான்
பின்
எட்டுக் கால்கள் கொண்டு
துள்ளிக் குதித்து
பறந்து மறைந்தது
வாய்
வலை வீசும்
அதிசயக் காடது..