பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை

வீட்டின் ஏதோ ஒரு
மூலையில் தான்
அவள்
எப்போதும் அமர்ந்திருந்தாள்

குத்துக் காலிட்டு
கைகளை கால்களுக்குள் விட்டுக் கொண்டு
பொக்கை வாயை அரைத்தபடி

வெயில் வரும் இடங்களாக இருக்கலாம்

உலர்ந்து சுருங்கியிருந்தாள்

யாரும் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை

எத்தனையோ பொருட்கள்
அவளும் ஒருத்தி

அன்றவர்கள் எழுந்து வந்த போது

பெரிதாக
ஒன்றும் வித்தியாசமில்லை

அமர்ந்திருந்தவள்
சற்றே சரிந்திருந்தாள்
அருகே அவள் தட்டு ஈ மொய்த்தபடி

நெடு நாட்களுக்குப் பின்
அவள் மேல் 
மனிதப் பார்வை 

தோல் கொஞ்சம் சிலிர்த்ததா என்ன?

நாளையிலிருந்து 
அவள் உணவு
காக்கைக்கு 

பெரிதாக
ஒன்றும் வித்தியாசமில்லை