உச்சி வீடு

அவள் வீடு 
மலையின்
உச்சியில் இருந்தது

வீட்டுக்குள் 
எப்போதும்
அவள் இசை 

சின்னன்சிறு
சொப்புப் பாத்திரங்கள்
அவள்
நினைத்ததை
நினைத்தவுடன்
சமைத்துக் கொடுத்தன

சுற்றிலும்
வேண்டியபோது
மழை

தெய்வங்களும்
பூதங்களும்
ஏவல் செய்தன

அழகென்றால் அழகு
ஒளியென்றால் ஒளி
இல்லையென்றாலும் இல்லை தான்

அவள் 
தன் சொந்த உச்சி வீட்டை
நீங்க விழைவதேயில்லை

நீங்கினாலும்

பாதையை
பத்திரமாய்
பிடித்த படி
மெல்லத்
தரையிறங்குவாள்

அது
புகைப் பாதை 
என்றறியாமல்..