மந்தியுருட்டும் மயிலின் முட்டை

If the video doesn’t play click on the title of the video
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: சின்மயி,  ஸ்ரீநிவாஸ்
படம்: கோச்சடையான்
ராகம்: பஸந்த்

முக்கிய வரிகள்:

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் ... 

நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்த
மலராய் 

இதயம் நழுவி நழுவி
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே
ஏனோ சொல்

இதயம் கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து போகுதே 
ஏனோ சொல்

சிறுகோட்டு பெரும்பழம் 
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே

 இப்பாடலின் முக்கியச் சிறப்பு குறுந்தொகையின் வரிகள் எடுத்தாளப் பட்டிருப்பது:

 பாடல் 38 / திணை: குறிஞ்சி /கூற்று: தலைவி கூற்று /பாடியவர்: கபிலர்

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும் 
நன்றுமன் வாழி தோழி. உன் கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

உரை: காட்டில் உள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டையை கருங்குரங்கு வெய்யிலில் வைத்து விளையாடும் குன்ற நாட்டைச் சேர்ந்தவனின் நட்பு அவன் பிரிவைத் தாங்கும் வல்லமை உள்ளவருக்கே நல்லது.

குறுந்தொகை 18 -  ஆசிரியர் : கபிலர் – திணை : குறிஞ்சி 

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட, செவ்வியை ஆகுமதி.
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

உரை: கெட்டி மூங்கிலினால் செய்த வேலியையுடைய வேரில் கொத்தாகப் பழுத்திருக்கும் பலாமரங்கள் (நிறைந்த) மலைச் சரிவைச் சேர்ந்தவனே! தக்க பருவத்தில் திருமணத்தைச் செய்வாயாக. யார் அதை(என் தலைவியின் நிலையை) அறிந்திருப்பார்? (இங்கு) மலைச் சரிவில் சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதைப் போன்று, இவளின் உயிர் மிகவும் சிறியது, அவளின் காதலோ பெரியது.

இப்பாடலின் மற்றொரு சிறப்பு இதன் இசை. முக்கியமாக ' இதயம் நழுவி, நழுவி, நகர்ந்து நகர்ந்து' என்ற வரிகள். நழுவி என்னும் போது மெதுவாகவும் நகர்ந்து என்னும் போது வேகமாகவும் பாடுவது போன்று இருக்கும்.  சின்மயியின் துல்லியமான குரல், இப்பாடலை வேறொரு தளத்திற்கு உயர்த்துகிறது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.