இயற்றியவர்: பாரதியார் இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இணை இசை: லால்குடி கிருஷ்ணன் பாடியவர்: பாலக்காடு ஸ்ரீராம் ராகம்: கல்யாண வசந்தம்
தீர்த்தக் கரையினிலே -- தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன் -- வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய் -- அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே பாவை தெரியுதடீ! மேனி கொதிக்குதடீ -- தலை சுற்றியே வேதனை செய்குதடீ! வானி லிடத்தையெல்லாம் -- இந்த வெண்ணிலா வந்து தழுவுதுபார். மோனித் திருக்குதடீ -- இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் -- பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ? கடுமை யுடையதடீ -- எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்தபின்னும் -- எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை; கொடுமை பொறுக்கவில்லை -- கட்டுங் காவலும் கூடிக் கிடக்குதிங்கே; நடுமை யரசியவள் -- எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள். கூடிப் பிரியாமலே -- ஓரிரவெலாம் கொஞ்சிக் குலவியங்கே ஆடி விளையாடியே- உன்றன் மேனியை ஆயிரங் கோடிமுறை நாடித் தழுவிமனக் -- குறைதீர்ந்து நான் நல்ல களியெய்தியே பாடிப் பரவசமாய் -- நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி’
எம்.எஸ்.வியின் இசையமைப்பில் எஸ்.பி.பி யின் குரலில் வந்த இந்த ‘தீர்த்தக் கரையினிலே..’ வெர்ஷன் ஒரு அற்புதம். கேட்கும் தோறும் மனம் கரையச் செய்யும் ஒரு இசை உன்னதம்.