நடனம்

அதி காலையில் என்னை அணைக்க வருகிறாய்
முகம் திருப்பிக் கொள்கிறேன்

இன்னொரு முறை
இன்னொரு முறை
மனம் அடித்துக் கொள்கிறது 

மீண்டும் அருகில் வருகிறாய்
நகர்ந்து செல்ல முயல்கிறேன் 

இழுத்து அணை
இழுத்து அணை 

திமிறிப் பறந்து தூரச் செல்கிறேன்

பின்னாலேயே வா
பின்னாலேயே வா 

ஓரக் கண்ணால் 
திரும்பிப் பார்த்து
வரவில்லையென்றானவுடன்
சோர்வாக
வானைப் பார்த்து
அமர்கிறேன்

வந்தால்..
கையெட்டாத் தொலைவுக்கு
மீண்டும் 
பாடிய படி
பறந்து செல்வேன்