அக்கடையில்
பலவித வண்ணங்களில்
கவிதைகள்
குவித்து வைக்கப்பட்டிருந்தன
மஞ்சள் வண்ணத்தில் ஒரு கூறு
பச்சையில் ஒன்று
இன்னும் பல வண்ணங்களில் ஒன்றொன்று
'அம்மா வாங்க, அய்யா வாங்க'
'கவித வாங்க, வாங்க வாங்க'
அலுப்பாய் இருந்தது அவனுக்கு
எங்கு பார்த்தாலும்
இப்போதெல்லாம்
கவிதைக் கடைகள்
'சல்லிசு தான் ஐயா, வாங்குங்க
மஞ்ச கவித ரெண்டு வாங்கினா
பச்ச கவித ரெண்டு ஃப்ரீ'
கூவிக் கொண்டிருந்தாள் கடைக்காரி
யோசித்துக் கொண்டே
கடையருகில் நின்றான்
'மஞ்சள்ல நாலு குடும்மா, பச்ச நாலு கெடைக்கும்ல'
'செவப்பு?'
'ஐயோ
வேணவே வேணாம்'
வாங்கிய
கவிதைப் பையை
எடுத்துக் கொண்டு
திரும்பியவனின்
முதுகு
மறையும் வரை
பார்த்துக் கொண்டேயிருந்தாள்
கடைக்காரி