ஏகம்-ஜெயமோகன்-சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் எழுதிய புனைவுக் களியாட்டக் கதைகளில், இசையையும் தத்துவங்களையும் பேசுபொருளாகக் கொண்டுள்ளவற்றில் முக்கியமான ஒன்று இக்கதை. ‘ஏகம்’ என்னும் இந்தத் தலைப்பு, இக்கதையை புரிந்து கொள்வதற்கான ஒரு திறவுகோல்.

‘ஏகம்’ என்ற சொல்லுக்கு ‘தனிமை’ என்றும் ‘ஒன்று’ என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ராகவன் என்பவர் சொல்கின்ற ‘மனிதர்கள் என்பவர்கள் தனிமையானவர்கள்’ என்ற வரியிலிருந்து, ஜேகேயும் மணியும் இரண்டற ‘ஒன்றாகக்’ கலந்தனர் என்பது வரையிலான பயணம் தான் இந்தக் கதை. ‘தனிமை’ என்பதிலிருந்து ‘ஒன்று’ ஆவது. ஒரு ஏகத்திலிருந்து மற்றொரு ஏகம் வரையிலான பயணம்.

இந்தக் கதையில் உள்ள மற்றொரு விசேஷம்– சாங்கியம், நியாயம், யோகம், வைசேஷிகம் போன்ற அவைதிக தரிசனங்களுக்கும் பூர்வ மீமாம்சம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் போன்ற வைதிக தரிசனங்களுக்கும் பிரதிநிதிகளாக கதாபாத்திரங்களை உபயோகித்து அத்வைதத்தை செயல்முறையாக ஆசிரியர் நிகழ்த்திக் காட்டுவது.

சுந்தர் என்பவர், விஸிஷ்டாத்வைதத்தின் பிரதிநிதியாக இருந்து வைணவப் பார்வையை முன் வைக்கிறார்:

“திருக்கோவிலூர்லே ஒருவாட்டி இப்டித்தான் பொய்கையாழ்வார் ஒரு சின்ன வீட்டு திண்ணையிலே மழைக்கு ஒதுங்கி நின்னுட்டிருந்தார். அப்ப பூதத்தாழ்வார் அங்கே வந்து இடம் கேட்டார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாங்கன்னு அவர் இடம் கொடுத்தார். ரெண்டுபேரும் பேசிட்டிருக்கிறப்ப பேயாழ்வார் அங்க வந்து இடம்கேட்டார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்னு சொல்லி உள்ள சேத்துக்கிட்டாங்க. மூணுபேரும் ஒட்டி நின்னுட்டு பெருமாளோட புகழைப் பற்றிப் பேசிட்ட்ருந்தாங்க.அங்க நாலாவது ஆளா பெருமாள் வந்து நின்னார்னு ஐதீகம். அந்த இடம் இப்ப ஒரு கோயில் மாதிரி.”

கோபாலன் என்பவர் பூர்வ மீமாம்ஸத்தின் குரலாக இருந்து இவ்வரிகளைச் சொல்கிறார்:

அது எவ்ளவு புராதனமான சடங்கு. அந்த மந்திரங்களுக்கெல்லாம் எப்டியும் மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கும். அந்தச் சடங்குகள் எல்லாமே குறியீடுகளா தோணும்ஒரு கவித்துவமான நாடகம் மாதிரி. ஒரு வழிபாட்டுச் சடங்கு மாதிரி…அதிலே டிவைனா என்னமோ இருக்கு

ராகவன் இவற்றுக்கெல்லாம் எதிர்வாதமாக இவ்வரிகளைச் சொல்கிறார்.

“ இயற்கைக்கு மாறான ஒரு சங்கல்பம்தான் கல்யாணம். ஆனா அதை ஏன் எடுத்துக்கறான் மனுஷன்? எந்த விதமான பாஸிட்டிவான ஃபீலிங்காலயும் இல்ல. முழுக்க முழுக்கபயத்தாலே.மனுஷனுக்கு தனிமைதான் குடுக்கப்பட்டிருக்கு. அதுக்கு ஆல்டர்நேட்டே இல்லை. முழுமையான தனிமை. அந்தத் தனிமையை பயந்துதான் அவன் சொசைட்டியை உருவாக்கிக்கறான். குடும்பத்தை உருவாக்கிக்கறான்…அவனே அதை முடிஞ்சவரை உறுதியாக்க முயற்சி பண்றான்…தெய்வங்கள் மேலே சத்தியம் பண்றான். தீ மேலே தண்ணிமேலே மண்மேலே சத்தியம் பண்றான்,,,,அவ்ளவு பயம். இதிலே டிவைனா என்ன இருக்கு?…ஒரு மனுஷனாலே இன்னொரு மனுஷனுக்குள்ள நுழையவே முடியாது

ஒரு விதத்தில் இவ்வரிகளை லௌகீகமான பார்வையாக நியாயத்தின் தரப்பாக எடுத்துக் கொள்ளலாம். கதைச் சொல்லியும் அவ்வப்போது இது போன்ற நடைமுறைப் பார்வைகளை முன் வைத்துக் கொண்டே இருக்கிறார்.

‘யோகம்’ என்னும் தரிசனத்தை சுட்டவும் சில வரிகள் வருகின்றன:

யோக சித்தவிருத்தி நிரோதஹன்னு பதஞ்சலி சொல்றார்.சித்தவிருத்திதான் இயற்கையானது. அதை நிப்பாட்டுற யோகம் செயற்கையானது.

ராகவனின் தரப்பான அவைதிக தரிசனங்கள் அனைத்தும் திருமணம் என்பதோ ஒருவரோடொருவர் கலப்பது என்பதோ செயற்கயானது என்கின்றன. கோபாலன், யோகம் முதலான அவைதிக தரிசனங்கள் தான் செயற்கை என்கிறார்.

கதைச் சொல்லியும் அவரின் நண்பர்களும் திருமண ரிசப்ஷனில் புல்லாங்குழல் மணியின் இசைக் கச்சேரியைக் கேட்கிறார்கள். இசையை ரசிக்காமல் மக்கள் மேடைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது எழுத்தாளர் ஜேகே அங்கு வருகிறார். சிங்கத்துக்கு வழி விடுவது போல கூட்டம் பிளந்து வழி விடுகிறது, மணியின் எதிரில் அமரும் ஜேகே கால் மேல் கால் போட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு சங்கீதத்தில் ஆழ்கிறார்.

ஜேகே வந்து அமர்ந்தது தெரிந்ததும் மணியின் இசையே மாறி விடுகிறது. கலைஞனுக்கும் ரசிகனுக்குமான அந்த மௌன உரையாடல் மிக அழகாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜேகே வாசிப்பது போலவும், மணி கேட்பது போலவுமாக பிரமை ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் இசையில் தங்களைக் கரைத்துக் கொள்கின்றனர். ஒருவரோடு ஒருவர் கலந்து அத்வைத நிலையை அடைகின்றனர். ஒரு நிமிடம் இல்லாமலேயே ஆகின்றனர்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தரிசனத்தின் குரலாக முன் வைத்து, கடைசியில் ஆத்மன், நாதம் என்னும் பிரம்மத்தில் இரண்டறக் கலக்கும் அத்வைதத்தை கண் முன் நிகழ்த்திக் காட்டுவதே இந்தக் கதையின் வெற்றி.

ஒரு சிறிய கதையில் இவை அனைத்தும் நிகழ்ந்திருப்பது அதிசயம் தான். ஜேகேவும் மணியும் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்வதாக ஏற்படும் பிரமை இக்கதையின் உச்சகட்டம்.

கடைசியில் மீண்டும் அதே சிறிய காரில் திரும்பிச் செல்லும் போது, அவர்கள் அனைவரும், ஒரு அருங்கணத்தைக் கண்ட பரவசத்தால், ஒருவரோடொருவர் இயைந்து மௌனமாகப் பயணம் செய்யும் கணம் மற்றொரு உச்சகட்டம்.

கதையின் ஆரம்பத்தில் தனித்தனி கருத்துக்களாக இருந்தவர்கள் முடிவில் இயைந்து காணப்படுவதும் கூட ஒரு ஏகத்திலிருந்து மற்றொரு ஏகத்திற்கு செல்லும் பயணம் தான்.

ஜெ.கருணாகரன் என்னும் எழுத்தாளரின் கருத்து நிலைக் கதைகளைப் பற்றி பேசும் போது இலக்கியத்தில் கருத்துகள் எப்படிச் சொல்லப் பட வேண்டுமென்று கதைச் சொல்லி விளக்குகிறார்:

கருத்துக்களை எப்டி சொல்லியிருக்குங்கிறதுதான் இலக்கியத்தோட அளவுகோல். ஒற்றைப்படையான உணர்ச்சிக்கூச்சலா சொல்லியிருக்கா? மறுபக்கத்தை சொல்லாம போதனையா இருக்கா? எல்லாரும் சொல்லுற பொதுக்கருத்தா இருக்கா? இலக்கியத்துக்கு வெளியே இருக்கிற அரசியல், சமூகவியல், உளவியல் கருத்துக்களை கொண்டுவந்து பதிச்சது மாதிரி இருக்கா? இதான் கேள்வி. அப்டி இருந்தா இலக்கியம் இல்லை”

“ஆனா ஒரு எழுத்தாளன் அவனே கண்டடைஞ்ச கருத்து அவனோட தரிசனமா வளந்து கதையிலே இருக்கும்னா அது பேரிலக்கியம். அதனாலேதான் டால்ஸ்டாயும் டாஸ்டாயெவ்ஸ்கியும் தாமஸ் மன்னும் விக்டர் ஹ்யூகோவும் மாஸ்டர்ஸ்”

இந்த விளக்கத்தைத் தன் கதையில் பயன்படுத்தியும் காட்டுகிறார் ஆசிரியர்.