புற்று

விளக்குகள் வரிசைக் கட்டி நின்றன
இடையே
தலையும் வாலும் ஒளிரும் மின்மினிகள் 

பெரும் அடுக்குகள்
ஒவ்வொரு தட்டிலும் வெவ்வேறு காட்சிகள்
இதற்குள் எப்படிச் செல்வார்கள்

ஒன்றை எடுத்துப் பார்த்தேன்
உள்ளிருந்த எல்லாம் நொறுங்கின

ஜாக்கிரதையாக கீழே வைத்தேன்
பெருமூச்சு விட்டேன்

நீரலை எழுந்தது
ஊருக்குள் புகுந்தது

அடித்துச் செல்லப்பட்டன மின்மினிகள்

சுட்டு விரலில் ஒத்தி
ஈரமில்லா இடத்தில் வைத்தேன்

விரல் 
அடுக்கொன்றில் மோதி விட்டது
அது சரிந்து 
மற்றொன்றின் மேல் விழுந்தது
அதுவும் சரிய
அனைத்தும் கலைந்தன

சிற்றுயிர்கள் மந்தை மந்தையாய் அகன்று ஓடின

கொத்தாக அள்ளினேன்

ஒன்று என்னைக் கடித்து விட்டது
கையை உதறிப் பின்னடைந்தேன்

நாவில் விஷம் கொண்டவர்கள்
கடித்த தடம் கன்னிப் போனது

வலியில் கண் மூடிக் கொண்டேன்

மீண்டும் கண் திறந்த போது

அதே இடத்தில்
அதே போல் மின்மினிகள் 
ஊர்ந்து கொண்டிருந்தன

இன்னும் உயரமான புற்றுகள் முளைத்திருந்தன