சுவாதித் திருநாளின் ஒன்பதாவதும் கடைசியானதும் ஆன ‘பாஹி பர்வத..’ என்ற இப்பாடல் ஆரபி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: எஸ். ராஜம்.
பரிவாதினி என்ற அமைப்பை நடத்தும் லலிதாராம் ராமசந்திரன் என்பவர் எஸ். ராஜம் அவர்களின் பழைய ஒலிப்பதிவுகளை curate செய்து நல்ல தரத்தில் வெளியிடும் அரும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் curate செய்த ஒலிப்பதிவுகளில் ஒன்று இது.
கமலாம்பா நவாவரணத்தின் கடைசி கீர்த்தனையான ‘ஸ்ரீ கமலாம்பா ஜயதி’ என்ற இப்பாடல் ஆஹிரி ராகத்தில் அமைந்துள்ளது. முதலாவது வார்த்தை மீண்டும் ஒன்றாம் விபக்தியில் அமைந்துள்ளது. பாடுபவர்கள்: ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள்.
ஆஹிரி ராகத்தை பாடினால் உணவு கிடைக்காது என்ற ஒரு நம்பிக்கை இசையுலகில் இருக்கிறது. ஆஹிரி பாடியவுடன் ஸ்ரீ அல்லது மத்யமாவதி போன்ற மங்கள கரமான ராகங்களைப் பாடி அதை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஒரு ஐதீகமும் நிலவுகிறது.
நவராத்திரியின் ஒன்பதாவது நாளான மஹா நவமி ‘சரஸ்வதி/ஆயுத பூஜையாக’ கொண்டாடப் படுகிறது. ‘வீணா புஸ்தக தாரிணி’ என்ற இப்பாடல் ராகம் வேகவாஹினியில் அமைந்துள்ளது. பாடுபவர்கள்: ஸ்ரீ ரஞ்சனி சந்தான கோபாலன் மற்றும் ஐஸ்வர்யா வித்யா ரகுநாத்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் சரஸ்வதியை ‘காஷ்மீர புர நிவாசினி’ என்றழைக்கிறார். காஷ்மீரம் சாரஸ்வத நிலமாகத் தான் அறியப் படுகிறது. புராதனமான மறைந்த சரஸ்வதி நதி காஷ்மீரத்தில் தான் உற்பத்தியானது. வேகவாஹினி என்பதும் ஒரு நதியின் பெயர் தான். ராகம் சக்ரவாஹம் தான் தீக்ஷிதர் பள்ளியில் வேகவாஹினி என்றழைக்கப்படுகிறது.