லீலை-ஜெயமோகன்-சிறுகதை விமர்சனம்

ஜெயமோகனின் ‘லீலை’ சிறுகதை , கிராமங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் ஒரு குழுவினரைப் பற்றியது. அதிலும் குறிப்பாக அக்குழுவில் நடிகையாக வேடமேற்று ஆடும் தாட்சாயணியைப் பற்றியது.

அக்கிராம மக்கள், மிகவும் அழகானவளாகவும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைப் போன்றும் தோன்றும் அவள் ஏன் இது போன்ற ஒரு தொழிலுக்கு வந்தாள் என்று ஆச்சரியம் கொள்கின்றனர். கிராமத்தில் இருக்கும் அனைவரும் அவளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். வெளிப் பேச்சுக்கு அப்பெண்ணின் மேல் கரிசனம் இருப்பது போல் தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் அவள் உடலின் மேல் கண்ணாக இருக்கிறார்கள். யாரெல்லாம் அவளைப் பார்க்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்த ஊரில் உள்ள ஒரு ரப்பர் ஆலையிலும் கிடைத்த வேலைகளையும் செய்து கொண்டு வாழும் உரப்பன் கணேசன் என்பவன் தாட்சாயணியின் மேல் ஒரு வழிபாட்டுணர்வு கொள்கிறான். அழகிய, குணமுள்ள பெண் இது போல் கஷ்டப் படுகிறாள் என்று நினைத்துக் கொண்டு அவள் மேல் பிரியமாக இருக்கிறான். அது பிரியமா, பக்தியா, காதலா அதற்கும் மேலான ஒன்றா என்று அவனுக்கே விளங்குவதில்லை. அவள் காலால் இட்ட பணியை தலையால் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறான்.

பேதைப் பெண், அழகி, உடலாகப் பார்க்கப் படுபவள் என்று யார் அவளைப் பற்றி என்ன நினைத்தாலும் மறுப்பின்றி தாட்சாயணி அதை ஏற்றுக் கொள்கிறாள். தன் மேல் ஏற்றப்படும் அப்பிம்பத்தை அவள் மிகச்சிறப்பாக நடிக்கவும் செய்கிறாள். ஆனால் அந்த பிம்பத்தோடு அவள் எந்த விதத்திலும் கலப்பதில்லை.

மாறாக யார் அவளைப் பற்றி என்ன நினைக்கிறாரோ, அதையே தன் இலாபத்துக்கு உபயோகித்துக் கொள்கிறாள். பெருவட்டரிடம் பேதையாக நடித்து பணம் வாங்கிக் கொள்கிறாள். தங்கனிடம் அபலையாக நடித்து தங்கச் செயினை வாங்கிக் கொள்கிறாள். இம்மொத்த நாடகத்திலும் தன்னோடு கூட சேர்ந்து நடித்த குழுவினரையும் தன்னுடைய கணவனாக நடித்த செல்லப்பனையும் கூட ஏமாற்றி விட்டு பணத்தோடு தப்புகிறாள்.தப்பி ஓட உரப்பனின் வெள்ளந்தித்தனத்தையும் அவன் தன் மீது வைத்திருக்கும் பக்தி பாவத்தையும் உபயோகித்துக் கொள்கிறாள்.

ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாரோ அதையே உபயோகப்படுத்தி அவர்களைத் தோற்கடிக்கிறாள். அவள் அவர்கள் அனைவரைக் காட்டிலும் புத்திசாலி, நுட்பமானவள்.

உரப்பனுக்கு தாட்சாயணி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியது மிகுந்த மன பாரத்தை அளிக்கிறது. அவன் உலகம் முற்றிலும் சரிந்து விடுகிறது. அந்தக் குழுவினர் அங்கிருந்து செல்லும்போது விட்டுச் செல்லும் சைக்கிள் தடம் போல, அவன் மனம் காயப்பட்டு விடுகிறது. சதா அங்கு வந்து மோப்பம் பிடிக்கும் நாயைப் போல ஊரார் கேலியையும் மீறி அந்த இடத்துக்கு வந்து கொண்டே இருக்கிறான்.

அவன் ஒரு முறை திருவனந்தபுரத்துக்கு செல்லும் போது அவளை மீண்டும் சந்திக்கிறான். அவனுக்கு அவளைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை. அவளை ஏமாற்றுக் காரி என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவளே உரப்பனை அருகில் அமரும் படிச் சொல்கிறாள்.

உரப்பனிடம் தன் பெயர் மகேஸ்வரி என்றும் , தான் ஏழை; தன் குடும்பத்துக்கு அப்பணம் தேவைப்பட்டது; ஊரார் தன் மீது பாவப்பட்டு தனக்கு கொடுத்த பணம் அது; தான் எடுத்துக் கொண்டு சென்றிருக்கவில்லை என்றால் குழு அவளை ஏமாற்றியிருக்கும் என்றும் பலவாறாகச் சொல்லி அவனுக்கு அவள் மீது இருந்த கருத்தை மாற்றுகிறாள். அவன் ” நீ திருமணம் செய்து கொள்ளவிலையா?” என்று கேட்பதற்கு, தனக்கு திருமணமெல்லாம் நடக்கவே நடக்காது என்று அவள் சொல்கிறாள். மீண்டும் அவன், அவள் கதையை நம்ப ஆரம்பிக்கிறான். இத்தனை கஷ்டப் படுகிறாளே அவள் என்று அவன் மனம் வருந்துகிறான்.

மகேஸ்வரியாக அவள் அப்பேருந்தை விட்டு இறங்கும் போது ஒரு வயதான பெண்மணி தற்செயலாக அவளை லீலா என்று அழைத்து, அவள் கணவன் எப்போது ஜெயிலில் இருந்து வருவான் என்று கேட்டு விடுகிறாள். அவனுக்கு பயங்கர அதிர்ச்சி. மீண்டும் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவனுக்குப் புரிகிறது.

அக்கிழவியின் கேள்விக்கு தாட்சாயணியின் எதிர்வினை தான் இக்கதையின் உச்சம். அவள் கொஞ்சம் கூட தயங்காமல் அந்தக் கிழவிக்கு தன் கணவனைப் பற்றிக் கூறிக் கொண்டே(அதுவும் உண்மையா என்று தெரியாது) இவனைப் பார்த்து புன்னகைக்கிறாள். அப்புன்னகை உரப்பனுக்கு எல்லாவற்றையும் கற்றுத் தந்து விடுகிறது, அவன் அவளை அவளின் உண்மையான உருவில் சந்தித்து விட்டான்.

உரப்பனுக்கு தான் சொன்னது பொய் என்று தெரிந்து விட்டது என்றவுடன், அவள் குற்ற உணர்ச்சியால் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்றிருக்கலாம். இல்லையென்றால் அழுது புலம்பியிருக்கலாம். வேறொரு கதை சொல்லி அவனை மடை மாற்றியிருக்கலாம். ஆனால் அவள் ஒரு நொடி தன் ஆடலை நிறுத்திக் கொண்டு தன் சுயத்தை அவனுக்குக் காட்டுகிறாள். அதுவே அவனுக்கு விடுதலை அளிக்கிறது.

தாட்சாயணி அனைத்தையும் தன் முழு சித்தத்துடன் அறிந்தே செய்கிறாள். அனைத்தையும் கடந்தும் இருக்கிறாள். எந்தச் செயலும் அவளை ஒரு மாற்று கூட தூய்மை இழக்கச் செய்வதில்லை.

தாட்சாயிணி, ரெஜினா(மஹா ராணி), மஹேஸ்வரி, லீலா அனைத்தும் அன்னையின் திரு நாமங்களே. அவள் திருவிளையாடல் பற்றியது இது என்பதாலேயே, கதையின் பெயரும் லீலை என்றிருக்கிறது . அன்னைக்கு விலாசினி என்றொரு நாமம் உண்டு. அலகிலா விளையாட்டுடையாள் என்று அதற்கு ஒரு அர்த்தம் சொல்வார்கள். உரப்பன் தேவியின் அலகிலா திருவிளையாடலை தன் கண் முன் கண்டு விட்டான்.

கதையில் வரும் ரெக்கார்ட் டான்ஸ் பற்றிய, பெண்ணுடலைப் பற்றிய சில வர்ணனைகள், பெண்கள் இக்கதையைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடும். பெரும்பாலான பெண்கள் இக்கதையை முழுவதும் வாசிக்காமலேயே கடந்தும் சென்றிருப்பார்கள். மனதளவில் முதிராத வாசகர்கள் கிளுகிளுப்புக்கான ஒரு வாய்ப்பாகக் கூட இக்கதையை வாசிக்க முடியும்.

ஆனால் உண்மையில் இக்கதை உரப்புள்ள ஒரு பெண்ணைப் பற்றியது. யாதேவி, ஸர்வ பூதேஷு கதைகளோடு சேர்த்து வாசிக்கப் பட வேண்டியது. பெண்ணின் வித்தியாசமான ஒரு பிம்பம் இக்கதையில் பதிவாகியிருக்கிறது. அதனாலேயே இவ்வாசிப்பனுபவத்தை பதிவு செய்யத் துணிந்தேன்.