முகமூடி

‘முகமூடி… முகமூடி… ‘

குரல் கேட்டது

ஆச்சரியம்

கை நிறைய முகமூடிகள்

தலையிலும் கழுத்திலும் முதுகிலும் கூட நாலைந்து

ஒன்று சிரித்தது

ஒன்று அழுதது

ஒன்று விழுந்து விழுந்து சிரித்தது

ஒன்று பேதை

சில சிங்கங்கள்..

ஒரு புலி, நான்கு ஓநாய் மற்றும்

இரண்டு பூனை

“வாங்கும்மா..”

“எனக்கு வேண்டாம்..”

“இதில்லாம எப்பிடி.. வாங்கிக்க”

“வேண்டவே வேண்டாம்”

“புரியாத புள்ளையா இருக்கியே”

“நீ போ..”

கதவைச் சாத்தப் போனேன்

“வேகாத வெயிலம்மா, அலையறேன்..”

அவன் திரும்பும் போது

என்னோடு பேசிய அவன் முகம்

பின் கழுத்தில் மாட்டியிருந்தது..