சுவை..

குரங்குகள் வந்து

சட்டென்று

சூழ்ந்து கொண்டன

ஹி.. என்று இளித்துக் கொண்டிருந்தன

ஒன்று கையைப் பற்றி இழுத்தது

ஒன்று கூந்தலை..

மற்றொன்று கைப்பையை

ஒன்று

தலைப்பைப் பற்றி இழுத்தது

விக்கித்து விட்டாள்

தலைப்பைப் பற்றிக் கொண்டு

கண்ணை மூடி

பல்லைக் கடித்துக் கொண்டு

உறைந்து நின்றாள்

மென்மையான கை ஒன்று

அவள் கன்னத்தைத் தொட்டது

பின் அவள் உதட்டருகே..

அதிர்ந்து

கண்ணைத் திறந்தாள்

மிகப் பெரும் குரங்கொன்று

அவள் முகத்தருகில்,

முகம் வைத்து

மஞ்சள் பற்கள் தெரிய

இளித்துக் கொண்டிருந்தது

“சிரி…உம்… சிரி” என்றது

மலங்க மலங்க விழித்தாள்

“ஹா…ஹா…ஹா”

பெருங்குரலெடுத்து சிரித்தது

“நீயும் சிரி… இது நகைச்சுவை” என்ற பின்

தூரத்தில் இருந்த கேமராவைக் காட்டியது

கண்களிலிருந்து நீர் வழிய

மெல்ல உதட்டை விரித்தாள்

கன்னத்தைத் தட்டி விட்டு

விலகிச் சென்றது

முகமூடியை கையிலெடுத்துக் கொண்டு

மற்றவையும் தான்..

பெருங்கேவலுடன்

அவள் மடிந்தமர்ந்தாள்

காலடியில்

உதிரம்

ஒரு குட்டையாய்

தேங்கியிருந்தது