கரவு-ஜெயமோகன்-சிறுகதை விமர்சனம்

Sudalai Madan- A guardian deity in Tamilnadu | Devta

“தேன்சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்”_இந்த வரி இக்கதையை புரிந்து கொள்ள உதவும் முக்கியமான வரி.

கதை களவைப் பற்றியது. தங்கனும் செல்லனும் மாயாண்டிச்சாமியின் கொடை நடக்கும் அவ்வூரில், களவு கொள்ள, வானம் முழுக்க நட்சத்திரங்கள் செரிந்த அமாவாசை இரவில் வந்து ஒளிந்திருக்கின்றனர்.

களவை ஒரு கலையைப் போல நுட்பமாக, கச்சிதமாகச் செய்பவன் தங்கன். அவனிடம் பயிற்சி பெறும் உதவியாளனாக இருப்பவன் செல்லன். செல்லனுக்கு தங்கன் களவு சம்பந்தமான ஞானத்தை உபதேசித்த படியே இருக்கிறான்.

காளைகளைத் திருடச் செல்லும் போது எப்படிப் பதமாக புல்லைக் காண்பித்து அவற்றை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பாடமெடுக்கிறான். களவு அவனுக்கு ஒரு வாழ்க்கை முறை. அதைச் செய்வதற்காக அவன் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி கொள்வதில்லை. அவனுடைய தெய்வமும், ஞானமும் களவு என்னும் துறையைச் சேர்ந்தவை.

நாம் இப்படி நினைத்துப் பார்க்கலாம்–மற்றவர் பொருளை எடுத்துக் கொள்வது என்பது தவறானது இல்லை என்ற விழுமியம் கொண்ட துறை களவுத் துறை, என்றால், தங்கன் செய்வது எதுவுமே தவறானது இல்லை அல்லவா? களவைத் துறை எனலாமா என்றால், ஆம் துறை தான். தங்கன் அதை அத்தனை அறிவுப் பூர்வமாகவும், நுட்பமாகவும், ஆன்மீகத் தளத்திலிருந்தும் அணுகுகிறான். மற்றவர் பொருட்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர் மனைவிக்கும் தங்கனின் உலகில் அதே விழுமியம் தான்–//“லே, கெட்டிக்கிடந்தா கொளம், ஓடினா ஆறு. எல்லாம் ஒண்ணுதான். கங்கைக்கு பங்கமில்லேண்ணாக்கும் சொல்லு.”// இவை தங்கனின் வார்த்தைகள்.

பீடி பிடிக்கும் போது எப்படி அந்த தீப்புள்ளி வெளியில் தெரியாமல் வைத்துக் கொள்ள வேண்டும், புகை விடும் போது காற்று செல்லும் திசை நோக்கி எப்படி விட வேண்டும், கட்டிக் கொண்டிருக்கும் லுங்கியை தப்பிக்கும் போது எப்படி பயன்படுத்துவது, அணிந்திருக்கும் கால் சட்டையை நீலக் கலராக அணிந்து கொள்வது என்று எத்தனை அறிவுப் பூர்வமான நுட்பங்களைத் தங்கன் பகிர்கிறான். இருட்டை உபயோகித்துக் கொண்டு ஊரின் பெரிய பாதையில் செல்வது, நடுநடுவே ஊர்காரர்களைப் பார்த்தால் மாமன் மச்சான் போல மையமாகப் பேசி சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்வது என்று நடைமுறை ஞானம் வேறு உபதேசிக்கிறான்.

//“நச்சத்திரம் இருக்கப்பட்டது கண்ணுக்குள்ளேயாக்கும்லே. மேலே தெரியுதது என்ன? அது சதாகாசம். நம்ம கண்ணுக்கு உள்ள இருக்கப்பட்டது சிதாகாசம். சிதாகாசத்திலயும் கோடானுகோடி நச்சத்திரங்க உண்டு. நாம வானத்தை பாத்தா இங்க உள்ளதும் அங்க போயி சேந்துகிடும்.”//– இது போன்ற மறை ஞானமும் தங்கனின் சொற்களில் அநாயாசமாக வருகிறது.

ஒரு கள்ளனுக்கு இதுவெல்லாம் தெரியுமா என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. செல்லனும் இதே கேள்வியை தங்கனிடம் கேட்கிறான். அதற்கு தங்கன்-“லே, நம்ம சாமி சுடலையாக்கும். சுடலை ஆறு சாத்திரம் எட்டு தொளில் ஒன்பது ரெசம் அறிஞ்சவனாக்கும்…நாம சுடலைக்க ஆளுல்லா?..நாம சுடலை ஏறி நிக்குத தேராக்கும் கேட்டுக்க” தன்னை சுடலையின் வாகனமாகத் தான் அவன் நினைத்துக் கொள்கிறான். ராா

செல்லன் தங்கனிடம் கேட்கிறான்-“தேன் சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்னு, ஏன் புலவரு மாயாண்டிச் சாமியைப் பத்தி சொல்றாரு?”

தங்கன் அதற்குக் கொடுக்கும் பதில்-“ஏலே, அது சாமி களவெடுக்குததப் பத்தி சொல்லுதாரு… தேன் சிட்டு தேனெடுக்குதத பாத்திருக்கியா? ஊதினா உதுந்திரக்கூடிய பூவுலே தேன்சிட்டு தேனைக்குடிச்சுட்டு போயிரும்… ஒரு வண்டோ தேனீயோ உக்காந்தா காம்பு களண்டு விளக்கூடிய பூவிலே இருந்து….அது செறக திரும்பி சுழட்டி வீசும். அப்ப அதுக்கு வெயிட்டே இல்லாம ஆயிரும். வெறுங்காத்திலே நின்னுட்டு கொம்ப மட்டும் பூவுக்குள்ள விட்டு தேனை எடுத்து குடிக்கும். அதே மாதிரியாக்கும் சாமி களவெடுக்குதது… நம்ம தொடுகதில்லை, நம்ம ஆத்மாவை எடுத்துக்கிடும்.”

இந்தக் கடைசி வரி தான் அவன் தன் தொழிலுக்கு தெய்வத்திடமிருந்து எடுத்துக் கொள்ளும் justification.

தங்கனை ஊர்காரர்களெல்லாம் பிடித்துக் கொண்டு சென்று கட்டி வைத்த பின்பும் துளியும் பயப்படாமல், பதற்றப்படாமல் தெளிவாக இருக்கிறான்.//தங்கனின் முகத்தில் மாயாண்டிக் கோயில் விளக்கின் ஒளி விழுந்தது. அவன் மிகமிக அழகாக இருந்தான். படத்தில் வரைந்ததுபோல தோன்றினான். மிகமெல்லிய மீசை, மலர்ந்த கண்கள், சிவந்த உதடுகள்// 

கடைசியில் மாயாண்டிச்சாமி ஆவிர்பவித்த சாமியாடி இவன் கட்டப் பட்டு கிடக்கும் இடத்துக்கு சாடிக் குதித்து வந்து, தங்கனுக்குள் இருக்கும் சுடலையை எழுப்புகிறான். மாயாண்டியும் சுடலையும் வெறியாட்டு ஆட சுற்றி நின்று மக்கள் கை கூப்புகிறார்கள். அவனைக் கொல்ல முடிவு செய்த மக்கள் அவனை வழிபடுகிறார்கள் என்று கதை முடிகிறது.

Mystical தளத்தில் வைத்துப் பார்த்தால்–தங்கன் ஒரு விதமான சொப்னத்தில் வாழ்கிறான்-“நாம ராத்திரியிலே சீவிச்சுதோம். ராத்திரியிலேயாக்கும் பாம்பு சீவிச்சுதது. பேயும் பூதமும் சீவிச்சுதது. கெந்தர்வனும் மாடனும் மாயாண்டியும் சீவிச்சுதது… இவனுகள பாரு… அந்தியானா வீட்டுக்குள்ள வெளக்க வச்சிட்டு இருக்குதவனுக. இவனுகளுக்கு ராத்திரியக் கண்டா பயம்…பகலு கண்ணு முன்னால தெளிஞ்சு கெடக்கு. ராத்திரின்னா சொப்பனமுல்லா? சொப்பனத்திலே என்ன உண்டுண்ணு எப்பிடித் தெரியும்? சாதாரணக்காரனுக்கு சொப்பனத்தைப்போல பயம் வேற இல்ல. வாற சொப்பனத்திலே முக்காலும் கெட்ட சொப்பனமாக்கும்” கள்ளன் வாறது அந்த சொப்பனத்திலே. சொப்பனத்திலே அவனுகளுக்க பெண்டாட்டிகளுக்க கொணமும் வேறேயாக்கும்னு அவனுக்கு தெரியும். பகலிலே அவளுகளை அடைச்சு போடலாம். சொப்பனத்துக்கு தாப்பாள் இல்ல பாத்துக்க”

அவன் தன்னை சுடலையின் ஊர்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறான்; தான் பயிலும் களவொழுக்கத்துக்கான அனைத்து moral fibre-ஐயும் திரட்டி வைத்திருக்கிறான். தான் செய்வதை தெய்வ ஆணையாக நினைத்து முழு ஈடுபாட்டுடனும் செய்கிறான். மாயாண்டித் தெய்வம் வந்து அழைக்கும் போது அவனில் உள்ள சுடலை விழித்துக் கொள்கிறது. புரியாத ஒன்றை, தங்கள் தெய்வமான மாயாண்டியால் சமமாக நடத்தப்படும் ஒருவனை ஊர்மக்களும் வழிபடுகின்றனர்.

Logical தளத்தில் வைத்துப் பார்த்தால், தங்கன் meticulous-ஆக plan செய்திருக்கிறான். அவன் பீடி பிடித்துக் கொண்டு காத்திருந்து பின் நேரத்தை அனுமானித்து தன் முதல் அடியை எடுத்து வைக்கிறான். அவன் பெரிய வீட்டில் திருட நுழையும் போது பூசை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து சாமியாடிக்கு அருள் வரும் நேரம் வந்து விடுகிறது. தங்கன் பிடி படாமல் இருந்திருந்தால், சாமியாடி எந்தச் சம்பவமும் இல்லாமல் சாமியாடி முடித்திருப்பார். ஊர்காரர்கள் பேசிக் கொள்ளும் உள்ளூர் கை சாமியாடியாக இருக்கலாம்.அவன் பிடிபட்டதால், அவர் அவனை விடுவிக்கிறார்.

சரியாக அவன் கட்டப்பட்ட ஆல மரத்துக்கு அவர் வருகிறார். அந்த ஊர்காரர்கள் பிடிபடுபவர் அனைவரையும் அங்கு வைத்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அது நம் அனுமானம் தான். கதையில் அதற்கான தரவுகள் இல்லை.

மாயாண்டிச் சாமி தீயை உண்பதும், ஆடுகளின் இரத்தத்தை குடிப்பதும் சாடிக் குதிப்பதும், சரியாக அந்த ஆல மரத்தடிக்கு வருவதும், சுடலை தூக்கி எறியப் பட்டது போல எழுந்து ஆடுவதும் கொஞ்சம் கூடுதலாக mystical தளத்தை நோக்கி இக்கதையை நகர்த்துகிறது.

நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும் கதை. ஆனால் இக்கதையை நம்பி களவில் ஈடுபட்டால் கிடைக்கும் தர்ம அடிகளுக்கு கதை பொறுப்பல்ல.

One comment

Comments are closed.