
அவளைத்
திருடி என்றாய்
பரத்தை என்றாய்
பழி சொன்னாய்
இல்லை இல்லை என்பதற்கே
அவள் ஆற்றல் முற்றிலும் செலவானது
எனக்குத் தெரியும்..
உன் போதாமையெல்லாம்
அவள் மீது இறக்கி விட்டாய்
நீ தெளிந்து விட்டாய்
அவள் மூழ்கி விட்டாள்
தன் கண்ணீரின் அனலை
ஏன் அது பற்றிக் கொண்டு எரியவில்லை..
அவள் கசப்பு முற்றிலும் கை மாறியதா
இல்லை கொஞ்சம் எஞ்சியதா
தலையணையைத் தீண்டியதும்
புத்துயிர் கொள்ளுமா
என்றாவது அவளுக்கு உறக்கம் வருமா..
நச்சரவம் தீண்டிய பின்
உடலில்
நஞ்சன்றி எஞ்சுவது என்ன
சூழும் நஞ்சில் உருகி அழிவதன்றி
இப்பாழ் உடம்புக்கு
ஊழும் தான் என்ன..