சித்திரம்

பச்சை நிறத்தில் வட்ட மேஜைகள்

அதைச் சுற்றி

நீல நிறங்களில் குட்டி நாற்காலிகள்

மஞ்சள் நிறத்தில் சுவர்கள்

அதில் பல வண்ணங்களில் மலர்கள்

மலர்களின் ஊடே

பச்சைப் பசும் புல் பரப்பு

அதில் ஒரு யானை, ஒரு ஒட்டகச் சிவிங்கி

காலடியில் இரண்டு முயல்கள்

தூரத்தில் சில மான்கள்

யானையும் ஒட்டகச் சிவிங்கியும் மான்களும் முயல்களும் சிரித்துக் கொண்டிருந்தன

ஒவ்வொரு நாளும்

சின்னக் குழந்தைகள்

அக்குட்டி நாற்காலிகளில் அமர்ந்து

வண்ணச் சித்திரங்கள் வரைந்தனர்

சின்னக் களி மண் வீடுகள் கட்டினர்

ரயில் பாட்டு, குயில் பாட்டு பாடினர்

சுவரிலிருந்த யானைக்கு ஆசையாய் இருந்தது

ஓர் இரவு

அது வெளியே வந்தது

சின்ன நாற்காலியில் கால் மடித்து அமர்ந்து

தும்பிக்கையை மறைத்துக் கொண்டது

சிரித்துக் கொண்டே

மறு நாள் காலை

அது மீண்டும் வந்தது

யானையைப் பார்த்த அவர்கள்

கைத்தட்டி கும்மாளமிட்டனர்

சுற்றிச் சுற்றி நடனமிட்டனர்

தொட்டு விளையாடச் சொல்லி

வாலைப் பிடித்து இழுத்தனர்

வலிந்து சிரித்துக் கொண்டே

அதுவும் தொடப் பார்த்தது

ஒளிந்து கொள்ள வைத்தனர்

எத்தனையோ முயன்றும்

கொஞ்சம்

வெளித் தெரிந்து விட்டது

‘சரி போகட்டும், பாடு’ என்றனர்

அதன் பிளிரலில்

அவர்கள் பயந்தே விட்டனர்

ஆடிக் காட்டுகிறேன் என்று

காலைத் தூக்கியது

அலறிக் கொண்டு ஓடியே விட்டனர்

சின்ன அறையில் தனியாய் நின்ற யானை

மீண்டும்

சித்திரத்துக்குள் சென்று

நின்று கொண்டது