
விரிந்த வானின் கீழ்
தனியளாய் நிற்கிறேன்
அவ்வப்போது பற்றிக் கொள்ளும் கைகள்
அடிக்கடி விட்டுச் செல்கின்றன
எத்தனை பேசினாலும்
மலையளவு சொற்கள்
பழுதின்றி மிச்சமிருக்கின்றன
ஒத்தி எடுத்தாலும்
காட்சிகள்
துளி மிஞ்சாது
உள் நுழைவதில்லை
சுற்றிலும் உள்ள முற்றமைதியின்
பேரோசை
என் செவிகளைத் துளைக்கிறது
யுகத் தனிமை..
மூச்சு மட்டுமே
என்
நிரந்தரத் துணை
அது என்னைக் கைவிடுகையில்
என் தனிமையும் என்னைக் கைவிடுகிறது