வெண்முரசில் நாகர்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இருபத்தியாறு நாவல்களைக் கொண்ட நாவல்வரிசை வெண்முரசு. இது மஹாபாரதத்தின் நவீன மறு ஆக்கம். வெண்முரசு மஹாபாரதத்தை புதிய கோணங்களில் சம காலப் பார்வையில் சொல்கிறது.

மஹாபாரதக் காலத்தில் இருந்த பல்வேறு குலக் குழுக்களின் நடுவே இருந்த பகையும் ஆதிக்கத்துக்கான மோதலுமே வெண்முரசின் முக்கிய இழை. க்ஷத்திரியர்கள் , யாதவர்கள், நிஷாதர்கள்,அசுரர்கள், அரக்கர்கள், நாகர்கள் என்று பல்வேறு குலக்குழுக்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டதே குருக்ஷேத்திரப் போர் என்று விவரிக்கிறது வெண்முரசு. இதில் நாகர்களின் பங்கு மிக முக்கியமானது.

வெண்முரசில் எத்தனையோ கதாபாத்திரங்களும் சம்பவங்களும் இருக்க நான் முதலில் எழுத நினைத்தது ‘நாகர்’களைப் பற்றித் தான்.

நான் ‘முதற்கனலை’ வாசிக்க ஆரம்பித்த இரண்டாவது நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்விக்கான தயாரிப்புகளைப் பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். பூர்ணாகுதிக்கான நாள் அன்று– ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் என்று இருந்தது. சொடுக்கிப் போட்டது போல் உணர்ந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்ததும் அதே ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் தான். அதை நாங்கள் கருட பஞ்சமி என்று அழைக்கிறோம். இந்தத் தற்செயல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இதுவே நாகர்களைப் பற்றி தொகுத்து எழுதவும் என்னைத் தூண்டியது.

நாகர்களும் தெய்வங்களும்:

வெண்முரசின் முதல் நாவலான ‘முதற்கனல்’ தொடங்குவதே நாகர்களிடமிருந்து தான். வேசர தேசத்தின் கிருஷ்ணை நதிக் கரையில் நாகர்களின் தேவியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை மடியில் அமர்த்தி நாகர்களின் தொல்கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறாள்.

Manasa - Wikipedia

ஒவ்வொரு மதமும் தரிசனமும், பிரபஞ்சம் முதன்முதலில் இவ்வாறு தான் உருவானது என்று சொல்ல ஒரு கதையை வைத்திருக்கிறது. நாகர்களுக்கும் அதே போன்று பல கதைகள் உள்ளன. அவர்களின் புராணங்களில் அவை சொல்லப்பட்டுள்ளதாக வெண்முரசு விவரிக்கிறது.

அத்வைதம், இப்பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து உருவானதாகச் சொல்கிறது. நாகர்குலத்து மானசாதேவிக்கோ அப்பிரம்மம் ஒரு கரிய நாகத்தின் வடிவில் இருக்கிறது. அந்த நாகத்திலிருந்து உருவான நாகர்களான தட்சப் பிரஜாபதியைப் பற்றியும், மரீசி முதலான ஏழு ரிஷிகளைப் பற்றியும் அசிக்னியைப் பற்றியும ஆஸ்திகனுக்கு அவள் கூறுகிறாள். தட்சனுக்கும் அசிக்னிக்கும் பிறந்தவர்களே தேவர்கள் முதல் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், புழு, பூச்சிகள், தாவரங்கள் வரை என்கிறாள் மானசாதேவி.

வெண்முரசின் ஒன்பதாவது நாவலான ‘வெய்யோனிலும்’ , நாக முதுமகளான திரியை கர்ணனிடம் கூறுவதாக இதே போன்றதொரு சித்திரம் வருகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் தங்கள் முதல் அன்னை நாகலையிடமிருந்து தோன்றியவர்களே என்கிறாள் முதுமகள். பிரம்மாவிடமிருந்து தோன்றியவர் தட்சப்பிரஜாபதி என்னும் நாகர் என்றும், அவர் மகளான கத்ரு, கசியபருடன் பெற்ற நாகங்களே இவ்வுலகைத் தாங்கும் சேஷன், வாசுகி முதலான மாநாகங்கள் என்றும் உரைக்கிறாள்.

வெண்முரசின் முடிவிலும் நாகர்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. சீர்ஷன் என்னும் பாணன் வடதிசை நோக்கிச் செல்லும் போது, அதே வேசர தேசத்தின் கிருஷ்ணை நதிக் கரையில் நாகர்களின் தலைவியான மானசாதேவியின் ஆலயத்தையும் அதன் அருகே அமைந்த ஆஸ்திகனின் ஆலயத்தையும் காண்கிறான்.

அங்கு ஒரு நாகர்குலத்து முதியவர் அவனுடன் உரையாடுகிறார். நாகர்களுடன் பிற குடியினர் நிகழ்த்திய போர்கள் முடிந்து விட்டதாகவும், குடிகள் ஒன்றோடொன்று கலந்து விட்டதாகவும், ஆயினும் நாகர்களின்றி வழிபாடுகளேதும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். ஆழிவண்ணனின் படுக்கை என, அனல்வண்ணனின் ஆரம் என, அன்னையின் மேகலையென அனைத்திடங்களிலும் தாங்களே நிறைந்திருப்பதால், வென்றவர்கள் தாங்களே என்கிறார் அவர்.

அருகர்களின் வரிசையிலும் இருபத்தி மூன்றாமவரான பார்ஸ்வநாதர் நாகர்களின் குருதியில் பிறந்தவர் என்பதால் அருகவழியிலும் நாகர்களே வென்றதாகச் சொல்லி வெண்முரசு முடிகிறது.

வெண்முரசின் தொடக்கமும் முடிவும் நாகர்களிடமே நிகழ்கிறது.

நாகர்கள்’ என்னும் கருத்தாக்கம்

வெண்முரசில் ‘நாகர்கள்’ என்னும் கருத்தாக்கம் இரண்டு விதங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது-ஒன்று தாங்கள் இழந்த நிலங்களை மீட்கப் போராடும் குலக்குழுவினர்; மற்றொன்று கதை மாந்தர் அனைவர் மனதிலும் இருக்கும் விழைவின், அகங்காரத்தின், வஞ்சத்தின் குறியீடு.

நாகர்கள் என்னும் குலம்:

நாகர்கள் இப்பாரத நிலத்தை ‘நாகலந்தீவு’ என்று அழைத்ததாக திரியை கூறுகிறாள்–“வடக்கே பனிபடு நெடுவரையும் தெற்கே அலைபடு குமரியும் கொண்ட இந்நிலம் நாகலந்தீவு என்று சொல்லப்படுகிறது“. நாகலந்தீவின் வடநிலம் சாரஸ்வதம்;கிழக்கு கௌடம்;நடுநிலம் வேசரம்;கீழ்நிலம் திராவிடம் என்றும் சரஸ்வதி ஓடிய சாரஸ்வதநிலமே நாகர்களின் முளைவயல் என்றும் அவள் கூறுகிறாள்.

மேலும் திரியை, நாகர்கள் என்போர் ஆயிரத்தெட்டு குடிகளாகப் பெருகி நாகலந்தீவை நிறைத்திருக்கும் மானுடத்திரள் என்கிறாள். தெற்கே அலைகடல்குமரிக்கு அப்பாலும் தாங்களே பரவியிருப்பதாகவும், மலைமுடிகள், தாழ்வரைகள், ஆற்றங்கரைச்சதுப்புகள், கடலோரங்கள் என தாங்களில்லாத இடமென ஏதுமில்லை என்றும் கூறுகிறாள்.

நாகர்கள்- பன்னகர்கள், உரகர்கள் என்று இரு பிரிவினராக வாழ்ந்ததாகவும், நீண்ட காலம் மோதிக் கொண்ட பின், இனி போரிட்டால் முற்றழிவோம் என்றறிந்து ஒன்றுகூடி, மஹாகுரோதை என்று அழைக்கப்படும் மானசாதேவியை வழிபட்டு காண்டவக் காட்டில் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறாள்.

‘குரு’ வம்ச மன்னர்களுக்கும் நாகர்களுக்குமான பகை காண்டவக் காட்டின் அழிப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்திரனுக்கும் அக்னிக்கும் நடந்த போராக இந்த காண்டவக் காட்டு எரிப்பை வெண்முரசு சித்தரிக்கிறது. அக்னி தேவன் அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் சந்தித்து தன் சாபம் தீர தனக்கு காண்டவக் காட்டை ஆஹுதியளிக்க வேண்டும் என்று விண்ணப்பிப்பதாக ஒரு கதை சொல்கிறது.

As the Amazon burns, the Mahabharata episode of Khandava forest fire holds  an important lesson

துர்வாச முனிவர் முன்பொருகாலத்தில் செய்த பூத வேள்வி தடை பட்டதால், தன் மாணவியான திரௌபதியிடம் காண்டவக் காட்டையும், அதிலுள்ள நாகர்களையும் அழிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, திரௌபதி அக்காட்டை எரித்து தன் இந்திரப் பிரஸ்தத்தை அங்கு அமைத்ததாக மற்றொரு கதை சொல்கிறது.

திரௌபதியின் பெருநகர் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற விழைவினாலேயே, அக்காடு எரியூட்டப்பட்டு, தங்கள் குழந்தைகளெல்லாம் அதில் எரிந்தழிந்ததைக் கண்ட நாக அன்னையர், தங்கள் மக்கள் எரியில் அழிந்தது போலவே, திரௌபதியின் மக்களும் ‘தீயில் எரிவதாக’ என்று சாபமிட்டு, தங்கள் குலதெய்வமான மஹாகுரோதையின் வழிகாட்டலின் படி கிழக்கே நாகநிலம் (Nagaland) நோக்கிச் சென்றனர் என்கிறது வெண்முரசு.

ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்களில் ஆஸ்திகனின் குடி செஞ்சு குடி என்று அழைக்கப்படுவதாக முதற்கனலில் ஒரு முதுநாகர் கூறுகிறார். மேலும் அவர்கள் வாழும் மலை புனிதமானது என்பதாலும், தவம் செய்தோரே அங்கு கால் பதிக்க முடியும் என்பதாலும் அது ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுவதாகவும் அவர் சொல்கிறார்.

சர்ப்ப சத்ர வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது வாசுகியே வந்து தன் தங்கை மானசாவிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார் என்றும் மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் அவ்வனத்தில் திறந்திருக்கிறது என்றும் அதுவே அஹோபிலம் என்றும் அந்த முது நாகர் சொல்கிறார்.

‘ஸ்ரீசைலத்துக்கும்’, ‘அஹோபிலத்துக்கும்’, ‘செஞ்சு குடிக்கும்’, நாகர்களின் பார்வையில் ஆசிரியர் அளிக்கும் விளக்கங்களே மேற்சொன்னவை. இன்றும் இருக்கும் இவ்விடங்கள் மஹாபாரதத்தோடு நாகர்களின் வழியாக இங்கனம் இணைக்கப்படுவது மிகுந்த மனயெழுச்சியைத் தருகிறது.

நாகம் என்னும் குறியீடு:

நாகம் என்னும் சொல் காமம், விழைவு, அகங்காரம், வஞ்சம் முதலான இருட்குணங்களின் குறியீடாக நாவல் முழுவதும் வருகிறது. ‘முதற்கனலி’லேயே ஆசிரியர் தட்ச பிரஜாபதியை கட்டற்ற விழைவுக்கு குறியீடாகவும், அசிக்னியை வளத்துக்கு குறியீடாகவும் கொள்கிறார்.

வெய்யோனில் திரியை கர்ணனின் மோதிரத்து கல்லின் அடியில் இருக்கும் சிறு புழு போன்ற நாகம், அவன் மனதின் ஆழத்தில் கரந்து அமைந்துள்ள விழைவையோ வஞ்சத்தையோ காட்டுவதாகவே கூறுகிறாள்.

இந்திரப்பிரஸ்தத்தில் மயனீர் மாளிகையில் துரியோதனனுக்கு நேர்ந்த அவமானத்தால் கர்ணனும், கௌரவர்களும் நிலை குலைந்து போகின்றனர். கர்ணன் பெரு வஞ்சம் கொள்கிறான். அச்சந்தர்ப்பத்தையே ஆசிரியர், சூரியனை ராகுவும் கேதுவும் விழுங்குவதாக விவரிக்கிறார். அங்கு கிரஹணம் ஏற்பட்டதோ இல்லையோ , கர்ணனின் மன ஒளி குன்றி அவனில் வஞ்சம் மேலோங்குவதையே ஆசிரியர் அங்கனம் குறிப்பிடுகிறார்.

முதற்கனலில் சர்ப்ப சத்ர வேள்வியின் போது, பூர்ணாகுதியில் வேள்விக்கூடமெங்கும் பல நாகங்கள் தோன்றி ஊர்ந்து வந்து வேள்வித்தீயில் ஏறிக்கொள்கின்றன.

Sarpa Satra - Wikipedia

ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்-“அவர்கள் ஒவ்வொருவர் நடுவிலிருந்த இருட்டும் பாம்புகளாகியது. அவர்களின் மடியின் மடிப்புகளுக்குள் இருந்த நிழல்கள் பாம்புகளாக மாறின. அவர்களின் அக்குளுக்குள் இருந்த துளியிருள் பாம்பாயிற்று. பின் அவர்களின் வாய்களுக்குள்ளும் நாசிகளுக்குள்ளும் இருந்த நிழல்கள்கூட பாம்புகளாக மாறின”.

மனிதர்களிடமுள்ள இருளின், தமோ குணத்தின் குறியீடாக ஆசிரியர் இங்கு நாகங்களை உபயோகிக்கிறார்.

ஆஸ்திகன் அஸ்தினபுரி நகரில் நுழையும் போது நகரமே அமைதியாக இருப்பதைப் பார்க்கிறான். மழைப்பிசிர்கள் நின்று, நனைந்த கல்பரப்புகளும் இலைகளும் ஒளி விட்டுக்கொண்டிருந்தாலும் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். குழந்தைகள் அவ்வளவு அமைதியாக இருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. யாழ்களுடன் இருந்தவர்கள், தயிர்கொண்டுசென்ற ஆய்ச்சியர் அனைவரும் கனவுருக்கள் போல அமைதியாக அசைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறான். அனைத்தும் ஒளி கொண்டிருக்கின்றன ஆனால் எவையும் உயிர் துடிப்பு இல்லாமல் அமைதியாக இருக்கின்றன. அவனை இது குழப்பத்திலாழ்த்துகிறது.

பின்னர் ஆஸ்திகன் ஜனமேஜயனிடம், அஸ்தினபுரி உயிரற்றதைப்போலக் கிடப்பதையும் வீரம் இல்லாத காவலர்கள்… துடிப்பு இல்லாத பெண்கள்… துள்ளிக்குதிக்காத பிள்ளைகள்… கொண்டிருப்பதையும், தடுக்கவில்லை என்றால் இந்த உலகமே இப்படி ஆகிவிடும் என்பதாலேயே வேள்வியைத் தான் நிறுத்த விரும்பியதாகவும் கூறுகிறான்.

இந்த இடத்தில் நாகங்களை உயிர் துடிப்புக்கு, ரஜோ குணத்துக்கு குறியீடாக்குகிறார் ஆசிரியர்.

மேலும், சத்வ, ரஜோ, தமோ குணங்களுடனேயே இப்புடவி பிறந்து வந்தது என்றும், அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை என்றும், ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும் என்றும், சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தால் அதன் வழியாக இவ்வுலகமே அழிந்து விடும் என்றும் ஆஸ்திகன் கூறுகிறான்.

வியாச வனத்திலிருந்து அங்கு வந்த வியாசரும், தட்சனென்னும் குறியீடு சுட்டும் விழைவு இல்லையேல் தன் காவியமில்லை; இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை; இதைப் புரிந்து கொள்ளவே தனக்கு இருநூறாண்டு கால வாழ்வு தேவையாய் இருந்ததாகக் கூறுகிறார்.

சத்வ ரஜோ தமோ குணங்களின் சம நிலையே முழுமை என்னும் ஞானம் வெண்முரசில் நாகர்களைக் கொண்டே கண்டடையப்படுகிறது.

கர்ணன் எனும் நாகன்:

குருக்ஷேத்திரப் போரில் வரும் பல்வேறு தரப்புகளில் நாகர்களின் தரப்பாக, அவர்களின் அரசனாக கர்ணன் வெண்முரசில் சித்தரிக்கப்படுகிறான். கர்ணனின் சிலைகளிலும் கூட அவன் கையில் காணப்படும் நாகபாசமே இதற்குச் சான்று. நாகாஸ்திரமே அவனுடைய முக்கியமான அஸ்திரம். அதை அர்ஜுனனின் மேல் ஒரே ஒரு முறை மட்டுமே ஏவ வேண்டும் என்றே குந்தி அவனிடம் சொல் கொள்கிறாள்.

Sculpture Of Karna In Nelliaippar... - SuryaPutra Karn - Sony Tv | Facebook

காண்டவப் பிரஸ்தக் காட்டை அர்ஜுனனும் கிருஷ்ணனும் தீயிட்டு அழிக்கும் போது அங்கிருந்து தப்பியோடும் நாகர்களின் தலைவியான திரியை என்ற முதுமகள் கர்ணனின் பின் பத்தி விரித்து எழுந்து நிற்கும் அரச நாகத்தைக் கண்டதும் கர்ணனும் நாகனே என்று கண்டு கொள்கிறாள். அவனிடம் நாகர்களின் வரலாற்றையும், அவன் தம் இனமே என்றும் கூறுகிறாள். அவன் உள்ளத்துள் கரந்திருக்கும் அவன் நஞ்சை நினைவு கொள்ளச் சொல்கிறாள். அவன் அதை மறுத்து அங்கிருந்து விலகிச் செல்கிறான். ஆனாலும் நாகர்கள் அவனைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

கர்ணன் துரியோதனனுக்கு நேர்ந்த அவமானத்தால் மனம் பேதலித்து இருக்கும் போது, அர்ஜுனனின் அம்பால் எரிந்து குற்றுயிராக இருக்கும் கடைசி நாகமைந்தனை அவனுக்குக் காட்டுகிறார்கள். அபார கருணை கொண்டவனான கர்ணன் அக்குழந்தைக்காகவே அர்ஜுனனைக் கொல்வதாக சூளுரைக்கிறான், பெரு வஞ்சம் கொள்கிறான.

அவ்வஞ்சம் நிறைவேறாததால் தான் பரீட்சித்தை தட்சன் மாதுளம் பழ விதையில் சிறு நாகமாக வந்து கொல்கிறான். அதற்கு பழி தீர்க்கவே ஜனமேஜயன் சர்ப்ப சத்ர வேள்வியைச் செய்கிறான் என்று வெண்முரசு விரிகிறது.

ஆசிரியர், கர்ணன் பிறப்பதற்கு முன்பே, பிருதையின் கர்ப்பத்தை விவரிக்கும் போதே, அதை நாக கர்ப்பமாகவே விவரிக்கிறார்.

அவள் கண்களின் வெண்பரப்பில் செண்பகம் போல நீலவரிகள் ஓடின. அவளுடைய உள்ளங்கைகள் ஊமத்தை மலரிதழ்கள் போல ஊதாநிறம் கலந்த செவ்வெண்ணிறம் கொண்டிருந்தன. அவள் கழுத்தில் செம்புக்கலங்களில் களிம்புத்தீற்றல் போல பச்சை படர்ந்திருந்தது. அவள் வயிறு கணம்தோறும் உருமாறிக்கொண்டிருந்தது. இளவரசியின் கருவில் இருந்த வாசனையும் நாகங்களின் வாசனையே. நாகமுட்டைகள் விரியும்போது வரும் வாசனை அது. இளவரசியின் மூச்சு நாகத்தின் சீறல் என ஒலித்தது.

பிருதையின் கர்ப்பத்தைப் பார்த்து ஒரு நாகினி இங்கனம் குறியுறைக்கிறாள்:

“இது ராஜஸகுணம் நிறைந்த தேவபீஜம். வரும் சித்திரை மாதம் விஷுவ ராசியில் இவன் கருவுற்று முந்நூற்றி அறுபத்தாறுநாட்கள் முழுமையடையும். அன்றே இவன் பிறப்பான். நாகபுராணங்களின்படி அனைத்து தேவர்களுக்கும் நாகங்கள் பிறந்தன. விண்ணகதேவர்களின் அரசனான சூரியனுக்குப் பிறந்தது ராஜநாகம். சூரியன் பிறதேவர்களின் ஆற்றல்களை எல்லாம் தனக்கென எடுத்துக்கொள்பவன். சூரியனின் மைந்தனான ராஜநாகமும் தனக்கு எந்த ஆற்றல் தேவையோ அந்தப் பாம்பைப் பிடித்து உண்கிறது. பிறக்கவிருக்கும் சூரியனின் மைந்தனுக்காக நாகங்களின் அரசன் காவலிருக்கிறான். என்றும் சூரியமைந்தனின் பின்னால் நாகங்களின் காவல் இருந்துகொண்டே இருக்கும். அவன் கண்களில் கூர்மையாகவும் அவன் கைகளில் விரைவாகவும் அவன் நாவில் விஷமாகவும் அவை திகழும்.நாகபாசன் என்றே அவன் அழைக்கப்படுவான்”

பிறப்பின் போதும் அறைமூலையில் பிரசவம் பார்க்க வந்த மருத்துவச்சியின் இடையளவுக்கு பத்தி தூக்கி ஒரு ராஜநாகம் நின்றிருப்பதாக விவரணை வருகிறது, பிறந்த குழந்தையை ஆசிரியர் இங்கனம் விவரிக்கிறார்:

கரியநிறமும் சுருள்குழலும் கொண்ட குழந்தை இரண்டு முழநீளமிருந்தது. குழந்தை அழவில்லை. ஆனால் நெய்யில் எரியும் தழல்போல உயிர்த்துடிப்புடன் நெளிந்தது. அவள் உடலில் இருந்த நீலத்தை முழுக்க குழந்தை உறிஞ்சி உண்டது என்றனர் சேடிகள். அவன் முலையுண்ணும்தோறும் பிருதை வெளுத்து உயிர்க்குருதியின் நிறத்தை அடைந்தாள்.

இவ்வாறாக வெண்முரசின் கதைப் பின்னலில் கர்ணனை ஆசிரியர் நாகனாகவே முன் வைக்கிறார்.

நாகர் குல வழக்கங்கள்:

வெண்முரசில் நாகர் குல வழக்கங்களாக சிலவற்றை ஆசிரியர் சுட்டுகிறார்.

  1. முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.

இப்போதும் எங்கள் வீடுகளில் எடுக்கும் ஆரத்திகள், மனிதர்களுக்கு என்றால் மஞ்சளும் சுண்ணமும் கலந்த சிவந்த கரைசலாகவும், தெய்வங்களுக்கு என்றால் குங்குமம் சேர்த்த சிவந்த கரைசலாகவும் இருக்கின்றன. குருதிக்கு பதிலாகத் தான் இந்தக் கரைசல் என்பதும் ஆரத்தி எடுத்தவுடன் வாசலில் கொட்டுவது என்பது ஒரு விதமான பலி சடங்கு என்பதும் எனக்கு இதை வாசித்த பின்பு தான் புரிந்தது. அதே போல் இப்போதும் எங்கள் குடும்பங்களில் நாகதெய்வங்கள் வழுத்தப்படும் போது மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது.

2. குடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.

நாக பஞ்சமி நாட்களில் இது போன்று நாகங்களை ஆரமாக போட்டுக் கொண்டு ஊர்வலமாக செல்லும் நாகர்களைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

3. ஆஸ்திகன் அஸ்தினாபுரி சென்று சேரும் நாள் ஆடிமாதம் ஐந்தாம் வளர்பிறைநாள். அந்த நாளில் அவன் தட்சன் உயிரைக் கோரிப் பெற்று இறுதிவெற்றியை நிகழ்த்தினான் என்பதால் அதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடவேண்டும் என்று நாகர்கள் முடிவெடுக்கின்றனர்.

Naga Panchami Rituals - Celebration of Nag Panchami

இன்றும் கொண்டாடப்படும் இப்பண்டிகை மஹாபாரதத்தோடும் நாகர்களோடும் இங்கனம் இணைக்கப் படும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

தெலுங்கர்களான எங்கள் வீடுகளிலும் நாக சதுர்த்தியும் கருட பஞ்சமியும் முக்கியமான பண்டிகைகள். நாக பஞ்சமியை நாங்கள் ஏன் கருட பஞ்சமியென்று அழைக்கிறோம் என்பதும் வியப்புக்குரிய விஷயம் தான். நாங்களும் நாகர்களின் வழித்தோன்றல்கள் தானோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை:)

நாகயிணை:

ஜனமேஜயனின் வேள்வியிலிருந்து தப்பிய தட்சனும் தட்சகியும் முயங்கி தங்கள் குலத்தை பெருக்கிய சித்தரிப்பும் இந்த நாவலின் அபூர்வமான கவித்துவமான பகுதி:

பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து படமெடுத்தது. ஆயிரம் படங்களின் விசையால் அவன் உடல் முறுகி நெளிந்தது.அவனருகே சென்று நின்ற தட்சகியான பிரசூதி ‘நானும்’ என்றாள். அவளுடைய உடலிலும் ஆயிரம் தலைகள் படமெடுத்தெழுந்தன. அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது.

இதையே ஆசிரியர் ‘வாழிருள்’ என்கிறார்.

நாகங்களைப் பற்றி பேசும்போது அவர்களின் தர்மமான காமத்தைப் பற்றி சொல்லாமல் ஆகுமா?

ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர்.முதல் யோகம் திருஷ்டம் எனப்பட்டது.இரண்டாம் யோகம் சுவாசம். மூன்றாம் யோகம் சும்பனம். நான்காம் யோகம் தம்ஸம்.ஐந்தாம் யோகம் ஸ்பர்சம்.ஆறாம் யோகம் ஆலிங்கனம்.ஏழாம் யோகம் மந்திரணம்.எட்டாம் யோகம் போகம்.ஒன்பதாம் யோகம் லயம்.

இருவரின் வால்நுனிகளும் மெல்லத்தொட்டுக்கொண்டிருக்க தட்சனின் தலைகள் கிழக்கிலும் தட்சகியின் தலைகள் மேற்கிலும் கிடந்தன. அவர்கள் இரு முழுமைகளாக இருந்தனர். முழுமைக்குள் முழுமை நிறைந்திருந்தது.”

D'source Design Gallery on Shivarapatna Stone Crafts II - The ...

இந்த உருவைத் தான் நாம் ஆலமரங்களின் அடியில் பிரதிஷ்டை செய்து குழந்தை வரம் வேண்டி வணங்குகிறோம்.