நீலகண்டம்

செம்புலப்பெயல் நீராய் சில நாள்

தாமரை இலைத் தண்ணீராய் சில நாள்

கத்தி முனையில் நடந்து

பாதமெல்லாம் தழும்புகளைச் சுமக்கும் கூத்தாடி நான்

ஒரு தேக்கரண்டி உப்பு

அரைச் சிட்டிகை பெருங்காயம்

இரண்டு முட்டை நெய்

அதெல்லாம் சரி தான்

எத்தனைப் பங்கு அன்பு

எத்தனைப் பகுதி உண்மை

எத்தனைத் துளி விஷம்

எப்போது புரியும் எனக்கு

முழுமையாய் என்னைத் தந்து கொண்டிருந்தேன்

இப்போது கற்றுக் கொண்டு விட்டேன்

பறவை தன் குஞ்சுக்கு

சின்ன அலகால்

கொஞ்சம் கொஞ்சமாய் தந்தது

வேறு வழியே இல்லை

நானும் ஆரம்பித்து விட்டேன்

துளித் துளியாய் என் விஷத்தை புகட்ட.

நான் நீலகண்டனா என்ன

விஷத்தை கழுத்திலேயே தேக்க..