தயை

என் கையைப் பற்றிக் கொள்ளாதே

விட்டுவிடுவாயோ என்ற பதற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை

எனக்கு நன்றாகத் தெரியும்

உனக்கு முடிவின்றி கைகள் இல்லை

எதையோ விட்டுவிட்டே என்னைப் பற்றுகிறாய்

எதையோ பற்றுவதற்கே என்னை விடுகிறாய்

ஆனால்

பாலையின் மகள் நான்

மணலையே மலையாகப் பார்ப்பவள்

என் கையிலிருந்து உன் கை நழுவும்போது

உச்சி மணலில் புதைந்து போகிறேன்

உயிர்த்தெழுதல் கடினமாகிக் கொண்டே செல்கிறது

பயணம்

வெற்று வெளியில் தான்

என்றாலும்

மலைகளின்றி இருந்தால் கொஞ்சம் சுலபம்

பாலை நிலவைப் பார்த்தபடி

ஆழ்கடலின் நீர்க்குமிழியாய்

சுவடின்றி மறைந்து விடுவேன்

தயை கொள்.