வெண்முரசு-வாசிப்பனுபவம்

Mahabharatha - Home | Facebook

வெண்முரசு வெளி வந்த ஏழு ஆண்டுகளும் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நானும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயமாக வாசிக்கும் போது முழு உருவம் தெரியாமல் ஆகி விடுகிறதே என்று விசனப்பட்டதுண்டு. ஒரு நாவல் முடிந்ததும் அடுத்த நாவல் வரும் வரை 15-20 நாட்கள் இடைவெளி விடுவார் ஆசிரியர். அந்த இடைவெளியில் முந்தைய நாவலின் முழு உருவத்தை பிடித்து விடலாம் என்று இரண்டு மூன்று முறை முயன்றும் இருக்கிறேன். ஆனால், அப்போது தான் வாசித்த பகுதிகள் என்பதால் முதல் அத்தியாயத்தின் வரிகள் கூட நினைவில் இருக்கும். வாசித்ததையே மீண்டும் வாசிப்பது போல் தோன்றும். புதிய திறப்புகள் ஏதும் நிகழாதோ என்று எண்ணி விட்டு விடுவேன். நானும் அந்த இடைவெளி நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்வேன்.

ஒரு முறை நாவல் வந்து கொண்டிருக்கும் போதே 5-6 அத்தியாயங்கள் தொடர்ச்சியாக வாசிக்காமல் விட்டு விட்டேன். நான் யுதிஷ்டிரனின் தீவிர ரசிகை. யுதிஷ்டிரன் இளைஞனாக அறிமுகம் ஆகும் அத்தியாயங்க்களில் அவன் தன் தம்பிகளால் கடுமையாக கேலி செய்யப் படுவதாக வரும். எனக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் அந்த அத்தியாயங்க்களை வாசிக்கவே முடிய வில்லை. அதனால் வாசிப்பதை தற்காலிகமாக நிறுத்தி இருந்தேன். பின்னர் மனதை சமாதானம் செய்து கொண்டு, விட்டுப் போன அனைத்து அத்தியாயங்களையும் சேர்ந்தாற்போல் வாசித்த போது மற்றொரு சித்திரம் எழுந்து வந்தது. அதிலிருந்து வெண்முரசு நாவல்களை நேரம் கிடைக்கும் போது சேர்ந்தாற்போல் வாசிக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். அதற்கான நேரம் இப்பொழுது வாய்த்துள்ளது.

வெண்முரசு வரிசையின் முதல் நாவலான ‘முதற்கனலை’ முழுமையாக வாசித்து முடித்துள்ளேன். நான் வாசித்ததை எனக்கே தொகுத்துக் கொள்ள ஒவ்வொரு கதா பாத்திரத்திற்கும் ஒரு கட்டுரை எழுதலாமென்று நினைத்துள்ளேன்.

பெரும் கடலைப் போன்று இருக்கிறது இக்கதைப் பெருக்கு. ஒவ்வொரு சொல்லும் நுட்பமானதாக இருக்கிறது. உவமைகள் முன்னெப்போதும் சொல்லப்படாதவையாக இருக்கின்றன. சித்தரிப்புகள் விரிவானவையாகவும் தவற விடக் கூடாதவையாகவும் உள்ளன. முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர சிறிய பாத்திரங்கள் கூட பல பரிமாணங்கள் கொண்டு எழுந்து வருகின்றன. மிகச் சிறிய பாத்திரங்கள் கூட பெயரும் சித்தரிப்பும் தனித்துவமான குணங்களும் கதைப் போக்கிற்கு முக்கிய பங்கு அளிப்பவையாகவும் இருக்கின்றன. மிகப் பெரிய் பிரமிப்பு தான் ஏற்படுகிறது.

இருந்தாலும் பிடித்த இனிப்பை ருசித்து ருசித்து உண்பது போல வெண்முரசைப் பற்றிய இத்தொடர் கட்டுரைகளை எழுதலாம் என்று எண்ணுகிறேன். எங்கனம் வருகின்றன என்று பார்ப்போம்.