
பாதையோர மலர் நான்
பெரும்பாலும் எவரும் என்னைப் பறிப்பதில்லை
திரும்பிக் கூட பார்ப்பதில்லை
ஆனால் நான் உற்றுப் பார்க்கிறேன்
சிலசமயம் வண்டிகள் சிலசமயம் மனிதர்கள்
சிலசமயம் விலங்குகள் சிலசமயம் பறவைகள்
எப்போதாவது ஒரு வண்டு
அல்லது ஒரு பட்டாம்பூச்சி
என்னைக் கடந்து செல்வதுண்டு
ஓரக் கண்ணால் பார்ப்பதுண்டு
காற்று என்னை அவ்வப்போது அசைப்பதுண்டு
வண்டிகளின் விசை என்னை வேரோடு அசைப்பதுண்டு
சில கால்கள் என் மீது நடப்பதுண்டு
சில என்னை உதைப்பதுண்டு
யாராவது சிறுநீர் கழிக்கையில்
என் மீதும் சில துளிகள் தெறிப்பதுண்டு
என்னால் பெரிய உபயோகமில்லை
பயனற்றவள் நான்
எனினும்
ஒவ்வொரு நாளும் மலர்கிறேன்
நான் உயிர் என்பதால் அல்ல
நான் வர்ணம் என்பதால் அல்ல
நானும் இம்மாபெரும் இருப்பின் ஒரு துளி என்பதால் கூட அல்ல
நான் ஒரு மலர் என்பதால்
எனக்கு அதைத்தவிர வேறொன்றும் தெரியாது என்பதால்..