
கன்னி அவள்
வாலைக் குமரி
சிற்றாடை கட்டியவள்
பட்டாம்பூச்சி
நின்ற இடத்தில் நின்றவளில்லை
கல்லாகச் சமைந்துவிட்டாள்
கால் கூட மாற்றவில்லை
கல்லிலேயே கால் தடம் பதிந்து விட்டது
காத்திருக்கிறாள்
கடல் நோக்கியிருக்கிறாள்
காலைக் கழுவும் அலைகள்
எந்த அலை அவன் தூதைச் சுமந்து வருமோ
அறியாச் சிறுமி
அலைகளை நம்புவதில் பயனுண்டா
யுகங்கள் உருண்டோடுகின்றன
அவள் கை மாலையில்..
அவள் வைரம்
சிந்தாமல் சிதறாமல்
நாகமணியாய்
நாசியில் மினுக்குகிறது
ஏக்கம்..
துயரம்..
தனிமை..
நம்பிக்கை..
காதல்..
அவள் தவம்..
இப்போதெல்லாம் அதுவே
ஒவ்வொரு நாளும்
கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது
மீண்டும் கிழக்கில் உதிக்கிறது