
நாஞ்சில் நாடனின் இந்த நாவல் ஒரு முக்கியமான சொற்களஞ்சியம். வயலும் உழவும் சார்ந்த கலைச்சொற்களின் ஆவணம். ஒரு உழவு சார் கிராமத்தில் இருக்கக் கூடிய social structure,(ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும்), நிலவுடமையாளர்கள் மற்றும் நிலமற்றோர் இவர்களின் நடுவே உள்ள dynamics, ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதால், இந்த நாவல் சமூக வரலாற்றுப் பார்வையில் முக்கியமான அனுமானங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறது.
மொழியியலுக்கும், சமூக வரலாற்று ஆய்வுக்கும் இந்நாவல் பங்களித்திருப்பதைப் போலவே உணவியல் என்ற ஒன்று உண்டென்றால் அதற்கும் இந்நாவல் நிறைய அளிக்கிறது. ஆசிரியரின் சுவையுணர்வைப் பற்றியும், வேளாண்மை குறித்த அறிவைப் பற்றியும், மரம், செடி கொடிகள், உணவு வகைகள் பற்றிய தனித்த ஞானத்தைப் பற்றியும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த தனித்த உள்ளீடு தான், இந்நாவலை நாஞ்சில் நாடனின் நாவலாக்குகிறது.
நம் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர் ஒருவர், தங்கள் காலத்துக் கதையை, உபரி நுண்தகவல்களுடன் சுவைபட சொல்வதைப் போல் உள்ளது இந்த நாவல். ஊர் வரியை பிரித்துக் கொடுக்கும் போது போடப்படும் கணக்கு, ‘கணேசன் மகனிடம் புத்தகம் வாங்கச் சென்றிருக்கிறான்’ என்று self-reference செய்து கொள்வது ஆகியவை புன்னகையை வரவழைக்கின்றன. ’கணக்கு’ இல்லாமல் நாஞ்சில் நாடனின் நாவல்கள் முற்றுப் பெறுவதில்லை. அனைவர் வாயிலும் சரமாரியாக எழும் வசவுகளும் மொழியியலுக்கும் சமூக வரலாற்றாய்வுக்கும் ஆசிரியர் அளிக்கும் கொடைகளே. இவையெல்லாம் நாஞ்சில் நாடனின் முத்திரைகள்.
ஊர்க் கொடையின் போது துடியான தெய்வங்களுக்கு வாய்கட்டி மூச்சடக்கி மாமிசப் படைப்பு அளிக்கப் படுகிறது. அதன் மணம் கொடுப்பவர் அறியா விட்டாலும் கோவில் முழுக்க பரவியிருக்கிறது. இது இந்நாவலின் கடைசிச் சித்திரம்-கந்தையாவின் கொலைக்குத் தொட்டடுத்து வருவது. கந்தையா யாரால் எங்கனம் கொல்லப் பட்டான் என்பது ஊரறிந்த இரகசியமாக இருப்பதற்கான குறியீடாக இதைக் கொள்ளலாம்.
தன் பாட்டனாரின் கதையை ஆசிரியர் இந்த நாவலில் எழுதியிருப்பதாக அறிகிறேன்.அதனால் தான் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் கூட ’கந்தையா’.
ஊர் அதிகார வர்க்கத்தின் முன் தலை தாழ்த்த மாட்டேன் என்னும் ஒரு rebel கந்தையா. தனக்காக மட்டுமின்றி தன்னைப் போன்ற எழைகள் அனைவருக்காகவும் சிந்திப்பவன் அவன். அனைவரையும் இணத்துக் கொண்டு ஒரு சிறிய அளவு பொதுவுடைமை சமுதாயத்தை நிகழ்த்திக் காட்டுகிறான். சுடுகாட்டுத் தோப்பைத் திருத்தி அனைவருக்கும் பயன் சென்று சேரும் விதமாக, காய்கறித் தோட்டமாக மாற்றிக் காட்டுகிறான். விக்ரம சிங்கப் பிள்ளை அதை ஒரு முறை அழித்த போதிலும் மீண்டும் உருவாக்கிக் காட்டுகிறான. ஊக்கமுள்ள ஒரு தலைவன் அவன்.
ஊர்கொடையை விட பிள்ளைகளின் பள்ளியை சீர் செய்வதை முக்கியமாக நினைக்கிறான். பெண்களின் மானத்துக்கு ஊறு வரும் போது , அதைத் தட்டிக் கேட்கிறான். முற்றிலும் லட்சியவாத பாத்திரமா என்றால் அதுவும் இல்லை. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் தயங்குவதில்லை. தன் ஊர் அதிகார வர்க்கத்தின் முன் அவன் கலகக் காரனாய் இருப்பதற்கான காரணம் ஒரு விதமான frustration என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தக் கலகக் குரலை ஆரம்பத்திலேயே அடையாளம் காணும் அதிகார வர்க்கத்தினர் , அக்குரல் வளையை ஒரேடியாக அறுத்து விடுகிறார்கள். கொடையில் அளிக்கப் படும் பலியாடாகிறான் கந்தையா. அதிகார வர்க்கம் வெற்றி பெற்றது போன்ற impression தான் உருவாகிறது.
நாவல் இந்த இடத்தில் தான் வெறும் நிகழ்வுக் கோவையாகி விடுகிறார் போல் தோற்றமளிக்கிறது.. மேலெழுந்து எந்த தரிசனத்தையும் உணர்த்துவதில்லை; எதோ ஒன்று இங்கு சமன் செய்யப் படவில்லை; ஒற்றைப் படைத் தன்மையுடன் இருக்கிறது என்பதாக உணர்கிறோம்.
ஆனால் வாழ்க்கை என்பது அங்கனம் பொருளற்ற ஒன்று தானே. அதனால் தான் இந்த நாவலும் பொருளற்ற முறையில் முடிவு கொள்கிறது என்று நினைக்கிறேன். வாழ்க்கையை மிக நுட்பமாக நகல் செய்வதால், இந்நாவல் ஒரு வெற்றிப் படைப்பு என்றே நினைக்கிறேன்.