
‘தூக்குமேடைக் குறிப்பு’,(Notes from the gallows-Julius Fucik) புத்தகத்தை முதன்முறை வாசிக்கத் தொடங்கும் போது, மிகவும் ‘gory’ யாக இருப்பதாகத் தோன்றியது. ஷோபா சக்தியின் பாக்ஸ் நாவல் நினைவில் வந்து கொண்டே இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை சமயத்தில் வெளிவந்த அநேகக் கட்டுரைகள், உண்மைச் சம்பவங்களின் சித்தரிப்புகள் ஆகியவை நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. மிகவும் துயர் தருவதாக இருந்ததால், வாசிப்பதை நிறுத்தி விட்டேன். அடுத்த முறை வாசிக்கத் தொடங்கிய போது அத்தனை இம்சிக்கவில்லை. பழகிவிட்டது. ‘தீவிரவாதிகள்’ என்ற சொல் மனதில் சுற்றிக் கொண்டிருந்தது. கண்மூடித்தனமான ’தீவிரம்’ அது நாஸிஸமோ, ஃபாஸிஸமோ, கம்யூனிஸமோ எதுவானாலும் லட்சோப லட்சம் உயிர்களை எடுக்க வல்லது.
இந்தக் குறிப்புகள் 1943-ல் எழுதப்பட்டவை. 1936-38 ல் தான் ஸ்டாலினின் ஆட்சியில், ‘the great purge’ நடக்கிறது. ஃபாஸிஸமோ, கம்யூனிஸமோ இரண்டும் ஒன்றுக்கொன்று வன்முறையில் குறைந்தவை அல்ல. கதாநாயகனின் தரப்பு என்பதால், ’கம்யூனிசம்’ ஒரு பொன்னுலகை உருவாக்கப்போகிறது என்று அவர் நம்புவதால் அது சுபக்கமாக இருப்பதற்கான அவசியமில்லை.
சமீபத்தில் Georgia நாட்டிற்குச் சென்றிருந்தோம். Erstwhile USSR-ன் பகுதியாக இருந்த நாடு அது. அங்கு மக்கள் ரஷ்யாவை அடி வயிற்றிலிருந்து வெறுக்கிறர்கள். ரஷ்யர்கள் கட்டிய பெரிய கட்டிடங்களை அவர்கள் கட்டியது என்பதற்காகவே உபயோகிக்காமல் போட்டு வைத்திருக்கிறார்கள். டூரிஸ்டுகளுக்கு அங்கே ரஷ்யர்களைப் பற்றிப் பேச வேண்டாம் என்றே எச்சரித்து அனுப்புகிறார்கள். Raw hatred for Russians அவர்களிடம் தெரிகிறது.
எந்த சித்தாந்தக்காக ஜுலியஸ் ஃபுசிக், இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொள்கிறாரோ அந்த சித்தாந்தம் 70 ஆண்டுகளில் வெறுப்புக்குரிய ஒன்றாக மாறி விடுகிறது. அவருடைய வலிகளுக்கும் கனவுகளுக்கும் எந்த அர்த்தமும் இல்லை இப்பொழுது.
ஆனால் ஆதாரமான ஏதோ ஒன்று இவ்வெழுத்தில் நம்மைக் கவர்கிறது. அது ஆசிரியரின் விழுமியங்கள்.
அவ்விழுமியங்களை தான் பூர்ணமாக நம்பும் சித்தாந்தத்தில் இருந்து ஆசிரியர் பெற்றுக் கொண்டிருக்கிறாரா என்றால், இருக்கலாம் ஆனால் முற்றிலுமாக இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. விதை, inspiration வேண்டுமானால் அச்சிந்தாந்திலிருந்து அவரில் விழுந்திருக்கலாம். ஆனால் அவ்விழுமியங்கள் முளைத்தது அவர் மனதில். அவர் தன் மனதில் வளர்த்து எடுத்தது அச்சிந்தாந்தத்தின் ஒரு தூய்மையான வடிவத்தை. அதனாலேயே அவர் கொண்டாடப்படுகிறார்.
ஆசிரியரின் ‘சக மனிதர்களின் மீது இருக்கும் அக்கறை, நம்பிக்கை; மரணத்தின் தருவாயில் கூட இருக்கக்கூடிய பதற்றமின்மை; சுற்றிலும் நடக்கும் விஷயங்களின் மீது உள்ள கூர்ந்த அவதானிப்பு, எதிர் காலத்தின் மீது உள்ள நம்பிக்கை; தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு முழுமையாக தன்னை ஒப்புக் கொடுத்தல்–ஆகியவையே நம்மைக் கவர்கின்றன. இவை அவர் communist என்பதால் அல்ல, மேன்மையான மனிதர் என்பதால் அவரில் வாய்த்தவை. அனைத்திற்கும் மேலாக இந்த எழுத்தில் உள்ள நேர்மையே இதை இலக்கியமாக்குகிறது.
இதன் ஆங்கில வடிவம் மிகச் சிறந்த கலைப்படைப்பு. தமிழ் மொழிப்பெயர்ப்பு மிகவும் சுமார். நிகா, ஜாப்தா போன்று ஒரு குழுவுக்கு மட்டுமே தெரிந்த சொற்களை கையாள்கிறார். திடீரென்று வற்றல் குழம்பு என்கிறார். Intelligentsia-வை படிப்பாளி என்று மொழிப்பெயர்க்கிறார். Devil என்பதை பேய் என்கிறார். பல சமயம் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆங்கிலத்தில் translate செய்து வாசித்தேன். தமிழ் வடிவம் வாசிப்பின்பத்தைக் கண்டிப்பாக குறைக்கிறது.